Published : 21 Jul 2015 04:38 PM
Last Updated : 21 Jul 2015 04:38 PM

இந்தியாவில் வணிக ரீதியில் முதல்முறை: கோவை அருகே 10 மடங்கு வேளாண் உற்பத்தி தரும் ‘ஏரோபோனிக்ஸ்’ கூடம்

வேளாண்மையில் 10 மடங்கு உற்பத்தி தரும் ‘ஏரோபோனிக்ஸ்’ அடிப்படையிலான தொழில் கூடத்தை வேளாண் பட்டதாரி அமைத்து சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டுத்துறை மூலமாக அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்கூடம், இந்தியாவில் முதல் வணிக ரீதியிலான ஏரோபோனிக்ஸ் கூடம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

கோவை அருகே உள்ள செங்கோடம்பாளையத்தில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ. 1.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்கூடம், வேளாண் உற்பத்தியாளர்கள், ஆராய்ச்சி யாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. இதற்குக் காரணம், இந்தியாவில் சோதனை அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட ஏரோபோனிக்ஸ் தொழிற்கூடத்தை, வணிக ரீதியில் செயல்படுத்திக் காட்டியுள்ளார் கோவையைச் சேர்ந்த கே.பிரபுசங்கர்.

புனேவில் வேளாண்துறையில் பி.டெக். படிப்பு முடித்துவிட்டு ஏரோ போனிக்ஸ் அடிப்படையிலான விவசாய ஆராய்ச்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தார். ஆராய்ச்சியின் பலனாக கிடைத்த வெற்றியைக் கொண்டு, சொந்தமாக தானியாஸ் ஆர்கானிக் என்ற பெயரில் ஏரோபோனிக் கூடத்தை அமைத்துள்ளார். இதற்கான 75 சதவீதம் நிதியை ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் கடனாக வழங்கி உள்ளது.

பிரபுசங்கர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ஏரோபோனிக்ஸ் என்பது மண் இல்லாத முற்போக்கு வடிவ விவசாயம். இந்த விவசாயத்தில் வேர்பகுதிக்கு நேரிடையாக காற்று, நீர் வழங்கப்படுகிறது. முழுமையாக ஆர்கானிக் முறையில் ஊட்டச்சத்து கலந்து நீர் மூலமாக அளிக்கப்படுகிறது.

இதன்மூலமாக 30 ஆயிரம் சதுர அடியில் இரட்டை அடுக்கில் 60 ஆயிரம் சதுர அடிக்கான பயிர்களை நட்டு இரட்டை மடங்கு உற்பத்தியைப் பெறலாம். இந்த முறையில் எந்த அழுத்தமும் இல்லாமல் பயிர்கள் மிக வேகமாக வளரும். அதாவது, சாதாரண முறையில் 100 நாள் விளையக்கூடிய தக்காளி 50 நாளிலேயே வளர்ந்துவிடும். ஆர்கானிக் முறை என்பதால் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கத் தேவையில்லை. சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு சொட்டு நீர்ப்பாசனம் என்றால் ஒன்றரை லட்சம் லிட்டர் தண்ணீர் பயிருக்காக தேவைப்படுகிறது. இதே வாய்க்கால் பாசனம் என்றால் 8.5 லட்சம் லிட்டர் ஆகும்.

ஆனால், இந்த தொழில்நுட்பத்தில் தினமும் அதிகபட்சமாக 1,500 லிட்டர் நீர் இருந்தால் போதும். பயிருக்காக பயன்படுத்தக்கூடிய அந்த நீரையும் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தலாம். மேலும், ஒருமுறை மழைநீரை சேகரித்தால் 3 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். முற்றிலுமாக மூடப்பட்ட சூழலையும், உட்புறத்தில் சூரிய சிதறடிப்பு நுட்பத்தையும் கொண்டது என்பதால் தேவையான வெளிச்சமும் பயிருக்கு கிடைத்துவிடும். வேர்பரப்பு முழுவதும் பிளாஸ்டிக் போரிங் அடிப்படையில் மூடப்படுகிறது. மண் இல்லாத விவசாயம் என்பதால் நோய் கிருமிகள் தாக்கமும் கிடையாது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை காற்றை வெளியேற்றி, புதிய காற்றை உட்செலுத்தினால் மட்டும் போதும்.

இந்த முறையில் 18 வகையான காய்கறிகள் நடும்போது வளர்ந்த பின்னர் தினமும் ஒரு டன் அளவுக்கு அறுவடைக்கு வந்துவிடும். ஏரோபோனிக்ஸ் தொழில்நுட்பம் குறித்து சிறிய அளவில் கூடம் அமைத்து தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்தேன். பல்வேறு தோல்விகளில் இருந்து பாடங்கள் கற்றேன். அப்போதுதான், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டுத் துறையின் வழிகாட்டுதல் கிடைத்தது. அதன் இயக்குநர் முருகேசன், தொழிற்கூடம் அமைவதற்கு ஒருங்கிணைப்புகளை செய்து கொடுத்தார். இதன்தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட இந்த தொழிற்கூடத்தை கடந்த 17-ம் தேதி, நபார்டு வங்கி மேலாண் இயக்குநர் அமலோபவநாதன் தொடங்கி வைத்தார். இந்த தொழில்கூடம் அமைப்பதற்கான தொழில்முதலீடு மட்டும்தான் அதிகம் என்றாலும் விவசாயிகள் 10-க்கும் மேற்பட்டோர் இணைந்து ஒரு குழுவாக மேற்கொள்ளலாம். அதற்கான ஒருங்கிணைப்பு தருவதற்கு தயாராக இருக்கிறோம். இதற்கான முதலீட்டை அதிகபட்சமாக 3 ஆண்டுகளில் திரும்ப எடுத்துவிடலாம்.

இந்தியாவில் விவசாய நிலங்களும், விவசாய உற்பத்தியும், விவசாயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. விவசாயம் என்பது நிலையில்லாத தொழில் போல் ஆக்கப்பட்டு வருகிறது. அதற்கு இந்த ஏரோபோனிக்ஸ் முறையிலான விவசாயம் புதிய மாற்றத்தைக் கொடுக்கும். தமிழகம் முழுவதும் மட்டும் இல்லாது நாடு முழுவதும் இந்த முறையை கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது நோக்கம். அது நிச்சயம் நிறைவேறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x