Last Updated : 24 Jul, 2015 05:49 PM

 

Published : 24 Jul 2015 05:49 PM
Last Updated : 24 Jul 2015 05:49 PM

பண்டைத் தமிழரின் பெருமைகளை பறைசாற்றும் ஓவியங்கள்: திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் சங்கத் தமிழ் காட்சிக்கூடம்

பண்டைத் தமிழரின் பெருமச்களையும், சிறப்புகளையும் இன்றைய தலைமுறையினர் பார்த்து உணரும் வகையில் மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சங்கத்தமிழ் காட்சிக்கூடம் திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ளது.

மதுரையில் உலகத் தமிழ் சங்கம் கட்டப்பட்டு வரும் டாக்டர் தங்கராஜ் சாலையிலேயே, காந்தி அருங்காட்சியகத்துக்கு எதிரே சங்கத் தமிழ் காட்சிக்கூடம் அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதைத் தொடர்ந்து தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 58 சென்ட் நிலம் மீட்கப்பட்டு, அங்கு ரூ.50 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

3,200 சதுர அடி கொண்ட அக்கட்டிடத்தில், இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள காட்சிகளை ஓவியங்களாகவும், சிலைகளாகவும், புடைப்புச் சிற்பங்களாகவும் அமைக்க மேலும் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து 2013-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அந்த நிதியைக் கொண்டு தற்போது, தொல்காப்பியர், ஔவையார், கபிலர் ஆகியோரது முழு உருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று கல்லணை கட்டும் பணியை கரிகால சோழன் ஆய்வு செய்யும் காட்சி, முல்லைக்குத் தேர் தந்த பாரி, தந்தை மற்றும் கணவனைப் போரில் இழந்த பெண் தனது சிறுபாலகனையும் போருக்கு அனுப்புகிற வீரக்காட்சி ஆகியவை புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

பூவில் அமர்ந்து தேனருந்துகிற தேன் சிட்டுக்கு தன் தேர் மணியின் ஓசை இடையூறாகிவிடுமே என்று கருதி மணிகளின் நாவினை இழுத்து க்கட்டும் தலைவன், சோழ மன்னன் ஒருவர் வடக்கில் இருந்து உயிர் நீத்த காட்சி, பாரி மகளிரான அங்கவை சங்கவையை திருமணத்துக்காக கபிலர் அழைத்துச் செல்லும் காட்சி, நீண்ட நாள் உயிர் வாழச் செய்யும் சக்தியுடைய நெல்லிக்கனியை அதியமான் ஔவைக்குத் தரும் காட்சி, 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பே கப்பல் கட்டுதல், அறுவை சிகிச்சை போன்ற தொழில்நுட்பங்களை தமிழர்கள் அறிந்திருந்ததை விளக்கும் ஓவியம் உட்பட 29 ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இலக்கியங்களில் நான்கு முதல் 20 வரிகளில் விவரிக்கப்பட்ட சங்க காலக் காட்சிகள், சிறு குழந்தைகளுக் குக்கூடப் புரியும் வண்ணம் எளிமை யாகவும், எழிலாகவும் உள்ளன. இந்த ஓவியங்களை மருது, அரஸ், மாருதி, பாலா, வேதா போன்ற பிரபல ஓவியர்கள் வரைந்துள்ளனர். கட்டிடத்தின் வெளிப்புறம் பாண்டிய மன்னரிடம் நக்கீரர் பரிசு பெறும் காட்சி பிரமாண்டமான கருங்கல் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா தாமதமாகி வருவது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:

ஓவியங்கள் மற்றும் புடைப்புச் சிற்பங்களின் கீழ் வைப்பதற்காக அக்காட்சி இடம்பெற்ற சங்கப் பாடலையும், விளக்க த்தையும் தமிழ், ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அவை அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல ஒளி, ஒலி காட்சியும் அரசின் ஒப்புதலுக்குச் சென்றுள்ளது. அவை ஒப்புதலாகி வந்துவிட்டால், முதல்வர் நேரம் ஒதுக்கினால் அடுத்த மாதமே திறப்பு விழா நடத்திவிடலாம்.

காந்தி அருங்காட்சியகம், அரசு அருங்காட்சியகம், உலகத் தமிழ்ச் சங்கம், ராஜாஜி சிறுவர் பூங்கா ஆகியவற்றுக்கு நடுவே இது அமைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக் களையும் வெகுவாகக் கவரும் என்று எதிர்பார்க்கிறோம். முற்றி லும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கைப் பார்வையிடுவதற்கு பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக் கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x