Published : 29 Jul 2015 07:26 PM
Last Updated : 29 Jul 2015 07:26 PM

திருவண்ணாமலையில் அவல நிலை; அழகிய தாமரைக்குளம் கழிவுநீர் குளமானது: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலையில் 365 குளங்கள் இருந்தன. சாதுக்கள் மற்றும் ஆன்மிகவாதிகள், ஒவ்வொரு குளத்திலும் தினமும் நீராடி அண்ணாமலையாரை வழிபடு வதற்காக குளங்கள் அமைக்கப் பட்டன என்ற சொல் உள்ளது.

அதேநேரத்தில் அக்னி மலை என்றழைக்கப்படும் அண்ணாமலையின் வெப்பத்தை தணிப்பதற்காக, அதனை சுற்றி 365 குளங்கள் வெட்டப்பட்டன என்ற கூற்றும் உள்ளது. இந்த குளங்களில், 80 சதவீதம் அழிந்துவிட்டன. மீதமுள்ள 20 சதவீத குளங்கள் அழிவின் விளிம் பில் உள்ளன. அந்த வரிசையில் ‘பொற்றாமரை குளம்’ இடம்பெற்று விட்டது.

திருவண்ணாமலை, தண்டராம்பட்டு சாலையில் சுமார் 24 ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரை குளம் அமைந்துள்ளது. காலப்போக்கில், தாமரைக் குளம் என்றழைக்கப்படுகிறது. அண்ணாமலையில் இருந்து வழிந்து வரும் தண்ணீர், ஓடை வழியாக தாமரைக் குளத்தை வந்தடைந்தது.

அதன்மூலம் விவசாயத்துக்கும் மக்களின் தாகத்துக்கும் உதவியது. அத்தகைய சிறப்புமிக்க குளம், இப்போது கழிவு நீரை சுமக்கிறது. அந்த குளத்தை தேடித்தான் பங்குனி மாதத்தில் உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் செல்கிற திரு விழா நடக்கும். ஆனால், பழைய வழக்கப்படி விழாவை நடத்த முடியாமல், சம்பிரதாய சடங்காக விழா நடத்தப்படுகிறது. இந்த அவல நிலைக்கு ஆட்சியாளர்களின் அலட்சிய போக்கே காரணம் என்று பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து த.ம.பிரகாஷ் என்பவர் கூறும்போது, “குளத்தின் வடக்கு மற்றும் மேற்கு திசையில் சுமார் 10 ஆயிரம் குடியிருப்புகள் உருவானதால் குளத்தின் தன்மை மாறியது. மலையில் இருந்து தண்ணீர் வழிந்து வரும் பாதை மறிக்கப்பட்டது. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தேக்க வேண்டிய கட்டாயத்துக்கு தாமரைக் குளம் தள்ளப்பட்டுள்ளது.

தாமரைக் குளம் அருகே சலவை தொழிலாளர்கள் வசித்து வந்தனர். அவர்கள் மூலமாக குளம் பாதுகாக்கப்பட்டது. இப்போது, கழிவுநீர் தேங்கிவிட்டதால் தொழிலாளர்கள் பலர் வெளியேறி விட்டனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தென் கரையில் சிமென்ட் தளம் அமைக்கப்பட்டது. அதிகாரிகள் பங்கேற்ற படகு சவாரியின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப் பட்டது. ஆனால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தென் திசையில் நவீன கழப்பறைகள் அமைக்கப்பட்டும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

பொற்தாமரை குளத்தை சீரமைக்க வேண்டும். குளத்துக்கு கழிவுநீர் வருவதை தடுக்க வேண்டும். கழிவுநீரை முழுமையாக வெளியேற்றி, குளக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும். மலையில் இருந்து தண்ணீர் வழிந்தோடி வந்த ஓடையை மீட்டெடுத்து மீண்டும் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x