Last Updated : 08 Jul, 2015 08:05 AM

 

Published : 08 Jul 2015 08:05 AM
Last Updated : 08 Jul 2015 08:05 AM

மேலும் ஒரு அக்கிரமம் அரங்கேற்றம்: சிறுவனை மது குடிக்க வைக்கும் அடுத்த வாட்ஸ்அப் வீடியோ காட்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுவனை மது குடிக்க வைத்த கொடூர சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்பே வேறொரு சிறுவன் மதுகுடிக்கும் அடுத்த வாட்ஸ்அப் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இது பொதுமக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத் தில் 4 வயது சிறுவனை மது குடிக்க வைக்கும் வீடியோ காட்சி ஒன்று வாட்ஸ்அப்பில் வெளியானதைத் தொடர்ந்து மதுவை குடிக்க வைத்த தாய்மாமன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் அதே பாணியில் மற்றொரு குழந்தைக்கு மது ஊற்றிக்கொடுத்து குடிக்க வைத்த அடுத்த வாட்ஸ்அப் காட்சி பரவி வருகிறது. 2 நிமிடம் 15 விநாடிகள் வரை ஓடும் இந்தக் காட்சியில், சுமார் 5 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனுக்கு அவனது தந்தை சம்மதத்துடன் மது குடிக்க கற்றுத் தருவதுபோல அந்த படக்காட்சி அமைந்துள்ளது.

இதில், சிறுவனை மது குடிக்க வைத்து அருகில் இருப்பவர்கள் பேசும் வட்டார மொழி தென் மாவட் டத்தைச் சேர்ந்தவர்களின் பேச்சு வழக்குப் போல உள்ளது. எனவே தென்மாவட்ட பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியிருக்க வேண்டும் என தெரிகிறது.

திருவண்ணாமலை சம்பவ விவகாரத்தில், வீடியோவில் தெரிந்த பைக் பதிவு எண்ணை வைத்து குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர். தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ காட்சியின் கீழே vidTrim என்ற பெயர் இடம் பெற்றுள்ளது.

விழுப்புரம் பகுதியில் இந்த வீடியோ காட்சி பரவியதால் இது தொடர்பாக விசாரிக்க விழுப்புரம் எஸ்பி நரேந்திர நாயரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, ஏடிஎஸ்பி பாண்டியராஜனை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இந்த குற்றத்துக்கு குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் ஐபிசி 307 கொலை முயற்சி பிரிவில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்யலாம்” என்றார்.

மேலும் இது தொடர்பாக பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி எம்.பி.யிடம் கேட்டபோது, “தமிழக அரசின் மது திணிப்பு கொள்கையே இதற்கு முழுக்க முழுக்க காரணம்.

உத்தரபிரதேச மாநிலத்தில் 20 கோடி மக்கள் தொகையில் ரூ.12,000 கோடி மது வருமானம் வருகிறது. தமிழ்நாட்டில் ஏழரை கோடி மக்கள் தொகையில் ரூ.26,000 கோடி மது விற்பனையாகிறது. இந்த அரசு மதுவுக்கு மட்டுமே இலக்கு வைத்திருப்பதே இதுபோன்ற செயல்களுக்கு காரணம்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x