Last Updated : 01 Jul, 2015 08:13 AM

 

Published : 01 Jul 2015 08:13 AM
Last Updated : 01 Jul 2015 08:13 AM

எட்டப்பன் வாரிசு பெயரில் மோசடி: ரூ.1,200 கோடி மதிப்பு நிலத்தை 66 லட்சத்துக்கு விற்றது எப்படி?

பள்ளிக்கரணையில் அரசுக்கு சொந்தமான 66 ஏக்கர் 70 சென்ட் நிலத்தை எட்டப்பனின் வாரிசு பெயரைச் சொல்லி போலி பத்திரம் தயாரித்து விற்றிருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை 200 அடி சாலையில் (நியூ ரிங் ரோடு) அரசுக்கு சொந்தமான 66 ஏக்கர் 70 சென்ட் நிலத்தை போலி ஆவணங் கள் தயாரித்து விற்பனை செய்து விட்டதாக தண்டையார்பேட் டையை சேர்ந்த சிவசூரியன் என் பவர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்துமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவின் நில அபகரிப்பு பிரிவு போலீஸா ருக்கு உத்தரவிடப்பட்டது. காவல் உதவி ஆணையர் சுந்தர்ராஜ், ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீஸார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்தன.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

வேளச்சேரி விஜயநகர் கோல் டன் அவென்யூவைச் சேர்ந்தவர் மு.பாலாஜி. பள்ளிக்கரணையில் உள்ள 66 ஏக்கர் 70 சென்ட் அரசு நிலத்துக்கு இவர்தான் போலி பத் திரம் தயாரித்து, தண்டையார் பேட்டை நேதாஜி தெருவைச் சேர்ந்த ‘பூமி பாலா’ அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் லட்சுமணனுக்கு விற்றுள்ளார்.

இதுதொடர்பாக பாலாஜி, அவரது தாயார், இரண்டு சித்திகள், நிலத்தை வாங்கிய லட்சுமணன், அவரது மகன் பாஸ்கர் உட்பட 20 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய் துள்ளனர். பாலாஜியையும், பாஸ் கரையும் போலீஸார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். போலி ஆவணங்கள் தயாரிக்க உதவிய தாக தேனி மாவட்டம் ஆண்டிப் பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த வினோத் கண்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பாலாஜி, போலீஸாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில், “நெல்லை மாவட்டம் எட்டயபுரம் பகுதிதான் எங்களது பூர்வீகம். கட்டபொம்மனை ஆங்கி லேயருக்கு காட்டிக்கொடுத்த எட்டப் பனின் வாரிசு நான். எனது தாத்தா வைத்திருந்த டிரங்க் பெட்டியில் சில பத்திரங்கள் கிடந்தன. அவற்றை ஆய்வு செய்தபோது, 1,888-ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஆங்கிலேயர்கள், பள்ளிக்கரணை நிலத்தை எட்டப்பனுக்கு தானமாக கொடுத்ததாக கூறப்பட்டிருந்தது. அதற்கான அரசாணையும் அதில் இருந்தது. அதை வைத்துதான் இந்த நிலத்தை விற்றேன்” என்று கூறியுள்ளார்.

ஆங்கிலேயர்கள் தானமாக கொடுத்ததற்கான ஆதாரமாக பாலாஜி கொடுத்த பத்திரங்களை ஆய்வு செய்தபோது அவை அனைத் தும் போலியாக தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்துதான் பாலாஜியை கைது செய்தோம். இந்த நிலத்தின் இப்போதைய மதிப்பு ரூ.1,200 கோடி. அதை 66 லட்சத்துக்கு விற்றதாக பத்திரப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் மேலும் பல பெரிய நபர்களுக்கு தொடர்பு இருக்கிறது. ஆனால் அதற்கான முறையான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அவை கிடைத்த பின்னர் அவர்களும் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

பத்திரப் பதிவு ஐ.ஜி. ஆஜராக உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

சென்னை

சென்னை பள்ளிக்கரணையில் 66 ஏக்கர் அரசு நிலம் ரூ.66 லட்சத்துக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டிருப்பது மர்மமாக இருக்கிறது என்று கூறிய உயர் நீதிமன்றம், பத்திரப் பதிவு ஐ.ஜி. நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. கூடுதல் ஐ.ஜி. ஆஜரானதை ஏற்காத நீதிபதி, ஐ.ஜி.தான் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் அரசுக்கு சொந்தமான 66 ஏக்கர் நிலம் ரூ.66 லட்சத்துக்கு ஒரு அறக்கட்டளைக்கு ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமணன், அழகிரி ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதி என்.கிருபாகரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நில விற்பனை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு (நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு-2) காவல் உதவி ஆணையருக்கு பத்திரப் பதிவுத் துறைத் தலைவர் அனுப்பிய கடிதம் அப்போது சமர்ப்பிக்கப்பட்டது. ‘‘பள்ளிக்கரணையில் 66 ஏக்கர் அரசு நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பீடு இல்லாததால், அருகில் உள்ள கட்டிடத்தின் வழிகாட்டி மதிப்பீடு அடிப்படையில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை’’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

பத்திரப் பதிவு செய்யப்பட்டிருப்பது 5 அல்லது 10 சென்ட் நிலம் அல்ல. ஒரே நேரத்தில் ஒரே ஆவணமாக 66 ஏக்கர் அரசு நிலம் தனியார் அறக்கட்டளைக்கு ஏக்கர் ரூ.1 லட்சம் என்ற அடிப்படையில் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலத்தை வாங்குபவர் நில உச்சவரம்பு சட்டத்தில் அனுமதி பெற்றுள்ளாரா, இல்லையா என்று, நிலத்தை பதிவு செய்யும் முன்பு பத்திரப் பதிவுத் துறை உயர் அதிகாரி சரிபார்த்திருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யவில்லை.

இப்போதுள்ள நிலையில், பள்ளிக்கரணையில் ஒரு ஏக்கர் ரூ.1 லட்சம் என்று நிர்ணயித்திருப்பதை கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. மேலும், நிலத்தை பதிவு செய்யும் முன்பு, நில உச்சவரம்புப் பிரிவு அதிகாரிகளுக்கு பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.

ஒரு இடத்துக்கு வழிகாட்டி மதிப்பீடு இல்லை என்றால், அருகில் உள்ள நிலத்தின் வழிகாட்டி மதிப்பீடு அடிப்படையில் பத்திரப் பதிவு செய்ய முடியாது. எந்த சட்டத்தின் அடிப்படையில் பத்திரப் பதிவு நடந்தது என்று தெரியவில்லை. 66 ஏக்கரை பத்திரப் பதிவு செய்தது மர்மமாக இருக்கிறது.

நீதிமன்றத்தையும் விற்றுவிடுவார்கள்..

இதை இப்படியே விட்டால், புனித ஜார்ஜ் கோட்டை, உயர் நீதிமன்றத்தைக்கூட நில அபகரிப்பாளர்கள் யாருக்காவது விற்றுவிடக்கூடும். எனவே, பத்திரப் பதிவுத் துறை ஐ.ஜி. ஜூன் 30-ம் தேதி (நேற்று) ஆஜராகி, எந்த அடிப்படையில் அரசு நிலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டது என்று விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பத்திரப் பதிவு ஐ.ஜி.க்கு பதிலாக கூடுதல் ஐ.ஜி. ஆஜரானார். அதை நீதிபதி கிருபாகரன் ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்த விசாரணையின்போது பத்திரப் பதிவு ஐ.ஜி.தான் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x