Published : 29 Jul 2015 02:47 PM
Last Updated : 29 Jul 2015 02:47 PM

புதுச்சேரியில் நாளை பொதுவிடுமுறை; கடைகள் அடைப்பு

அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு புதுச்சேரியில் வியாழக்கிழமை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது.கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்று சங்கங்கள் தெரிவித்துள்ளன. திரையரங்குகள் மாலை வரை இயங்காது.

அப்துல் கலாம் மறைவுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது நல்லடககம், ராமேசுவரத்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தமிழகத்தில் பொதுவிடுமுறை விட அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வணிகர் சங்கங்களும் கடையடைப்பு நடத்துகின்றன.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் டாக்டர் கலாம் மறைவுக்கு முதல்வர் ரங்கசாமி , துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங், அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் அமைப்புகள், பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினனர். இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை பொதுவிடுமுறை விட அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் ரங்கசாமி பரிந்துரையின் பேரில் இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் சிங் பிறப்பித்துள்ளார்.

முதல்வர் ராமேசுவரம் பயணம்:

டாக்டர் கலாம் நல்லடக்கம் ராமேசுவரத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களும் உடன் சென்றனர்.

கடைகளுக்கு விடுமுறை:

இந்நிலையில் வணிகர்களும் கடையடைப்பு நடத்த முடிவு எடுத்துள்ளனர். வியாழக்கிழமை காலை 6 முதல் நல்லடக்கம் முடியும் வரை கடையடைப்பு செய்து இறுதி அஞ்சலி செலுத்த உள்ளதாக வர்த்தகசபை தலைவர் செண்பகராஜன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் வணிகர் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கரன் கூறுகையில், வியாழக்கிழமை புதுச்சேரியில் முழு கடையடைப்பு நடைபெறும். கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டார்.

திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் லக்கி பெருமாள் கூறுகையில்," நாளை அனைத்து திரையரங்களிலும் மாலை 6 வரை அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x