Last Updated : 30 Jul, 2015 09:48 AM

 

Published : 30 Jul 2015 09:48 AM
Last Updated : 30 Jul 2015 09:48 AM

ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஆதரவற்றுவிட்டன: கலாம் உதவியாளர் தாஸ் கண்ணீர்

24 மணி நேரமும் கலாமுடனேயே இருப்பவன் நான். விடுமுறையில் ஊர் வந்ததால், அவர் உயிர் பிரியும் நேரத்தில் உடனிருக்கும் பாக்கியத்தை இழந்துவிட்டேன் என்று அப்துல் கலாமின் உதவியாளர் தாஸ் கண் கலங்கினார்.

டெல்லியில் 10, ராஜாஜி மார்க் என்ற முகவரியில் அமைந்திருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அலுவலகத்தில் 8 ஆண்டுகளாக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவர் தாஸ். நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று ராமேசுவரம் வநதிருந்தார்.

அவர் ‘தி இந்து’விடம் கூறியபோது, “அப்துல் கலாம் அலுவலகத்தில் அவருடைய ஆலோசகர், தனி செயலாளர்கள், தனி உதவியாளர்கள் உட்பட 6 பேர் பணிபுரிந்து வந்தோம். அதில் நானும், இன்னொருவரும் மட்டும் அவரது பக்கத்து அறையிலேயே தங்கியிருப்போம். மற்றவர்கள் அனைவரும் அலுவலக நேரம் முடிந்ததும் வீட்டுக்குப் போய்விடுவார்கள். எங்களுக்கு கலாமின் அலுவலகம்தான் வீடு.

அவருடன் 24 மணி நேரமும் உடனிருப்பேன். சிறு உதவி செய்தாலும், ‘வெரி குட்’, ‘தேங்க் யூ’ ஆகிய வார்த்தைகளை புன்முறுவலுடன் சொல்லுவார். அவர் வாழ்க்கையில் மிக அதிகமாக பயன்படுத்திய வார்த்தைகள் என்றால் அவைதான்.

மிகச்சாதாரண கீழ்நிலை உதவியாளரான என்னை மட்டுமின்றி எல்லோரையும் சார் என்று மரியாதையாக அழைப்பார். அவர் மேகாலயா செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்புதான் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்தேன். இதனால் 24 மணிநேரமும் உடனிருக்கும் நான், அவரது இறுதிக்காலத்தில உடனிருக்கும் பாக்கியத்தை இழந்துவிட்டேன். குடியரசுத் தலைவராக இருந்தபோதும் சரி, அதன்பிறகும் சரி குடும்பத்தினரை தன்னுடன் தங்க வைத்துக் கொண்டதில்லை கலாம். ஆனால், எங்களை குடும்பத்தினர் போல நடத்தினார். அவரது மறைவால் மிகப்பெரிய இழப்பு எங்களுக்குத்தான்.

எப்போதும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார் கலாம். அவரது மறைவால் ஆயிரக்கணக்கான புத்தகங்களும் ஆதரவற்ற நிலைக்கு வந்துவிட்டன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x