Last Updated : 11 Mar, 2014 07:49 PM

 

Published : 11 Mar 2014 07:49 PM
Last Updated : 11 Mar 2014 07:49 PM

கோவை: கட்சிகள் கூட்டணி முக்கியம் இவர்களுக்கே!

திருவிழாக்கள் களைகட்ட தோரணமும், அலங்காரமும் எப்படி அவசியமோ, அதேபோலத்தான் தேர்தல் திருவிழாவிற்கு கட்சிக் கொடிகளும், வண்ணத் தோரணங்கள் அவசியம். அனைத்துக் கட்சிக் கொடிகளும், கொள்கைகளும் கூட்டணியாய் தயாரிக்கப்படும் இடங்கள் தான் இந்த அச்சுக்கூடங்கள்.

கோவை, டவுன்ஹாலில் உள்ள காந்திஜி கதர் ஸ்டோர், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கட்சிக் கொடிகள், பேட்ஜ்கள் தயாரித்து வருகிறது. தேர்தல் என்றாலே கட்சிக்காரர்கள் மொய்த்துக் கிடக்கும் இடம் இந்தக் கடையாகத்தான் இருக்கும். ஆனால் வித்தியாசமாய், தேர்தல் தேதி அறிவித்த பிறகும் கூட்டம் ஏதுமின்றி காணப்பட்டது.

ஆனால், வழக்கம் போல வேலையில் மூழ்கியிருந்த ஊழியர்களைக் கேட்டபோது, தேர்தல் தேதியைப் பார்த்து கொடி தயாரிப்பதெல்லாம் முன்பு தான். வேட்பாளர்களும், கூட்டணியும் அறிவிக்க வேண்டும். அப்போது தான், எங்களது தொழிலே துவங்கும். முன்பெல்லாம் துணி பண்டலை மண்ணெண்ணெய், வண்ணக் கலவையில் நனைத்து காயவைத்து, விடியவிடிய வெட்டி, கட்சிக்கேற்ப கலர் வைத்து தைத்து, ஆர்டர்களை முடிக்க நாட்கள் ஓடுவதே தெரியாது.

வேட்பாளர்களை விட, தேர்தல் சமயத்தில் நாங்கள் தான் பரபரப்பாய் ஓடிக் கொண்டிருப்போம். ஆனால் இப்போது விலைவாசி, தேர்தல் விதிமுறைகள் காரணமாக, சாவகாசமாய் தயாரிக்கிறோம். அதிலும் மெஷின் பிரிண்டிங் வந்துவிட்ட பிறகு, 3 ஆயிரம் மீட்டர் துணியில் ஒரே நாளில் 6 ஆயிரம், 9 ஆயிரம் என அளவுக்கேற்ற கொடிகள் தயாராகிவிடும். ஆனால் அந்த அளவிற்கு தேவை இப்போது இருப்பதில்லை.

ஆர்டிஸ்ட் ராஜேந்திரன் கூறுகையில், அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக என அனைத்து கட்சி கொடிகளையும் தயாரித்து விட்டோம். தவிர, கூட்டணிகள் அறிவித்த உடன், அதன் தலைவர்களை வைத்து, இவருக்கு இவர் ஆதரவு என்ற வாசகங்களுடன் கூடிய பேனர்கள், கொடிகளை தயாரிக்க காத்துக் கொண்டிருக்கிறோம்.

பேனர் அளவிற்கான டிசைன்கள் கூட தயாராக உள்ளன. தவிர பேட்ஜ், ஸ்டிக்கர், சின்னம் வரைந்த குடை, மப்ளர், துண்டு, சால்வை, கைக்குட்டை, பிளாஸ்டிக் தோரணம் இவற்றுடம் இந்த ஆண்டு சின்னம் பொறித்த தொப்பி, பேனா, சன் லைட் தொப்பி, பேப்பர் தொப்பி, 3டி ஸ்டிக்கர் உள்ளிட்ட வகைகள் அறிமுகமாகியுள்ளன.

முன்பெல்லாம், தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பாகவே எங்கள் பணி முடிந்துவிடும். தற்போது தேர்தல் செலவு காட்ட வேண்டும் என்பதாலும், விதிமுறைகளாலும் தயாரிப்பு தள்ளிப்போகிறது என்றார்.

உரிமையாளர் ஜெயக்குமார் கூறுகையில், சட்டப்பேரவை தேர்தலில் அதிகம் பேர் போட்டியிடுவர். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்த போட்டியே இருக்கும். அதிலும் கடந்த தேர்தலை விட 60 சதவீதம் குறைந்த உற்பத்தியே உள்ளது. இதனால் விற்பனையும் பாதியாகக் குறையும்.

ஆறு மாதங்களுக்கு முன்பு துவங்க வேண்டிய பணிகள் எல்லாமே புதிய நடைமுறைகள் காரணமாக, சில நாட்களுக்கு முன்னர் துவங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார். தங்களுக்காகவும், தங்களது கொள்கை மற்றும் கொடிகளுக்காகவும் அயராது உழைக்கும் இவர்களுக்காகவாவது கூட்டணி முடிவை சீக்கிரமே அறிவிக்கட்டும் அரசியல் கட்சிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x