Published : 06 May 2014 08:00 AM
Last Updated : 06 May 2014 08:00 AM

கூடங்குளம் மின் உற்பத்தி 900 மெகாவாட்! - அணு மின் உற்பத்தியில் தேசிய சாதனை

கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி திங்கள்கிழமை 900 மெகாவாட்டை எட்டியது. நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களில் இது சாதனை அளவு.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணு உலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின்தொகுப்பில் இணைக்கப் பட்டிருந்தது. இதையடுத்து, 500 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டுமுன் பல்வேறு கட்டங்களாக அணுஉலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டு, பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன.

முதல்கட்டமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கு இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஆகஸ்ட் 14-ம் தேதி அனுமதி அளித்திருந்தது. அதை தொடர்ந்து அணுமின் நிலை யத்தில் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

570 மெகாவாட்

ஜனவரி 26-ம் தேதி கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் அணுவிஜய் நகரில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பேசிய அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி 570 மெகாவாட்டை எட்டியிருப்பதாக தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து 750 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டுமுன் அணுஉலை மற்றும் டர்பைன் ஆகியவை நிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மார்ச் மாதத்தில் 750 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி எட்டப்பட்டிருந்தது. பின்னர் அணுஉலை மற்றும் டர்பைன் செயல்பாடுகள் படிப்படியாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்திடம் அளிக்கப்பட்டது.

தேசிய சாதனை

இதனிடையே கடந்த மாதம் 28, 29, 30 ஆகிய நாள்களில் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரிய அதிகாரிகளும் விஞ்ஞானிகளும் கூடங்குளம் முதலாவது அணுஉலையில் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆயிரம் மெகாவாட் திறனுள்ள இந்த உலையில் 90 சதவிகிதம் அளவுக்கு மின் உற்பத்தியை மேற்கொள்ள வாரியம் அனுமதித்தது. இந்த அனுமதி கிடைக்கப்பெற்ற 4 நாள்களில் திங்கள்கிழமை அதிகாலை 900 மெகாவாட் மின் உற்பத்தி எட்டப்பட்டிருக்கிறது.

கூடங்குளத்திலுள்ள முதலா வது அணுஉலையில் மின் உற்பத்தி 570 மெகாவாட்டை எட்டியிருந்ததே ஒரு சாதனை அளவாக இருந்தது. தாராபூர் உள்ளிட்ட நாட்டிலுள்ள அணு உலைகளில் இதுவரை உச்சபட்ச அளவாக 540 மெகாவாட் மின் உற்பத்தியே நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் தனியாக ஓர் அணு உலையில் 900 மெகாவாட் உற்பத்தி என்பது மற்றுமொரு மெகா சாதனையாகும். நாட்டிலுள்ள அனல்மின் நிலையங்களில்கூட அதிகபட்ச அளவாக 660 மெகாவாட் வரையில்தான் மின் உற்பத்தி இருக்கிறது.

பங்களிப்பு அதிகம்

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் 1000 மெகாவாட் அணுமின்சார உற்பத்தி மூலம், நாட்டில் அணுமின்சாரத்தின் பங்களிப்பு, 4,780 மெகாவாட் டிலிருந்து 5,780 மெகாவாட்டாக அதிகரிக்கும். கூடங்குளம் அணு மின் திட்டம் யூனிட் -1 தேசிய மின்வாரியத்தில் இணைக்கப்பட்ட இந்திய அணுமின் கழகத்தின் 20-வது அணுமின் நிலையம் ஆகும். 1988-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி ரஷ்ய அதிபர் கோர்பச்சேவ் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய- ரஷ்ய கூட்டுமுயற்சியில் ரூ.13,500 கோடியில் கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் தொடங்கப்பட்டிருந்தது.

2-வது அணு உலை டிசம்பரில் தயார்

கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 2-வது அணுஉலையில் வெப்பநீர் சோதனை ஓட்டம் வரும் ஜூன் மாதத்திலும், யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணிகள் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்திலும், மின்உற்பத்தி இவ்வாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x