Last Updated : 29 Jul, 2015 08:20 AM

 

Published : 29 Jul 2015 08:20 AM
Last Updated : 29 Jul 2015 08:20 AM

அப்துல் கலாமை உயர்த்திய அரசு பள்ளிகள்

அப்துல் கலாம் ஆரம்பக் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை பயின்றது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்தான். அன்றைய காலகட்டத்தை நினைவுகூர்கிறார் கள் அந்தப் பள்ளிகளின் இன்றைய தலைமை ஆசிரியர்கள்.

ராமேசுவரம் பள்ளிவாசல் தெரு வில் உள்ள கலாமின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது மண்டபம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி எண் 1. ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்தை ஒட்டியிருக்கும் இப்பள்ளிதான் இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்த கலாமுக்கு, அகர முதல எழுத்தை கற்றுத் தந்தது.

அன்று தொடக்கப் பள்ளியாக ஓட்டுக் கட்டிடத்தில் இயங்கிய இப்பள்ளியில், கலாமை ஒன்றாவது பாரத்தில் சேர்த்தார் அவரது தந்தை ஜயினுலாபுதீன். 1941 முதல் 1946-ம் ஆண்டு வரை கலாம் பயின்ற இப்பள்ளியில்தான் அவரது தந்தையின் நண்பரும், ராமேசுவரம் கோயில் தலைமை குருக்களுமான பக்ஷி லட்சுமண சாஸ்திரியின் மகன் ராமநாத சாஸ்திரியும் படித்தார். கலாமின் மற்ற இரு நண்பர்கள் அரவிந்தன், சிவப்பிரகாசன்.

இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியை பி.ராஜலட்சுமி கூறியதா வது: தான் விஞ்ஞானியாக உருவாக அடித்தளம் அமைத்தது இந்தப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர்தான் என்று கலாம் அடிக்கடி குறிப்பிடுவார். தன் மனைவிக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கூட, கலாமை தன் வீட்டு சமையற்கட்டுக்கே அழைத்துச் சென்று உணவு பரிமாறியவர் அவர். இது குறித்தும், பெரிய நகரங்களில் உள்ள மெத்தப்படித்தவர்களுக்கு சமமாக நீ உயர வேண்டும் கலாம் என்று அவர் வாழ்த்தியது பற்றியும் தன்னுடைய அக்னிச் சிறகுகள் நூலில் எழுதியுள்ளார் கலாம் என்றார்.

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கலாம் படித்த ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரத்தில் ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ளது. இப்பள்ளியில் கலாம் படித்த வகுப்பறை இப்போதும் உள்ளது. அங்கு பிளஸ் 2 கணிதம், உயிரியல் பாடப்பிரிவு செயல்படுகிறது. அவரது சேர்க்கை விவரம் உள்ள பதிவேடு பொன்போல பாதுகாக்கப்படுகிறது.

இது குறித்து தலைமை ஆசிரியர் டி.பால்மாறன் கூறியதாவது:

இப்பள்ளியில் 13.6.1946-ல் கலாம் சேர்ந்துள்ளார். ராமேசுவரத் தில் இருந்து 58 கி.மீ. தொலைவில் இப்பள்ளி உள்ளதால், இங்குள்ள விடுதியில் தங்கித்தான் அவர் படித்தார். அவர் குடியரசுத் தலை வரான பிறகு எங்கள் பள்ளி மாண வர்கள் 60 பேர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றிருந்தோம். அவர்கள் தடுக்கப்பட்ட செய்தியை அறிந்த கலாம், ‘அவர்கள் என் குழந்தைகள் அவர்களே உள்ளே விடுங்கள்’ என்று சொன்னார். அச்சம்பவம் என் கண்ணில் இப்போதும் நிழலாடுகிறது. அவரைப் போன்று குழந்தைகளை நேசித்த ஒரு தலைவர் இனி பிறப்பது சந்தேகம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x