Last Updated : 20 Jul, 2015 08:33 AM

 

Published : 20 Jul 2015 08:33 AM
Last Updated : 20 Jul 2015 08:33 AM

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ‘ஆட்சியில் பங்கு’ நிபந்தனை: கூட்டணி அமைப்பதில் திமுவுக்கு சிக்கலை ஏற்படுத்துமா?

ஆட்சியில் பங்கு தந்தால் மட்டுமே கூட்டணி என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நிபந்தனை விதிப்பதால் கூட்டணி அமைப்பதில் திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணிக்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகளும் தொடங்கி யுள்ளன. கடந்த 2011 தேர்தலில் அதிமுக, தேமுதிக, இடதுசாரிகள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 29 தொகுதிகளில் வென்ற தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக, வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது.

2011 சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த திமுகவுக்கு 2016 பேரவைத் தேர்தலில் வென்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளை அழைத்து மெகா கூட்டணிக்கு திமுக முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதுவரை கூட்டணி என்றால் எத்தனை தொகுதி வேண்டும் என்று மட்டுமே பேசி வந்த கட்சிகள், இப்போது ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை முன்வைத்துள்ளன. கூட்டணி ஆட்சி என்ற கருத்தை முன்வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்தரங்கு நடத்தினார். விஜயகாந்த், இளங்கோவன், வைகோ, ஜி.கே.வாசன், ஜி.ராமகிருஷ்ணன் என பல தலைவர்களையும் சந்தித்து தனது நிலைக்கு ஆதரவு திரட்டினார்.

கவுரமான இடங்கள்

இந்நிலையில், காங்கிரஸும் இப்போது ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. கடந்த 17-ம் தேதி மதுரையில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய இளங்கோவன், ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில் உயிரைக் கொடுத்தாவது கவுரவமான இடத்தைப் பெறுவோம். உங்களுக்கு ஒரு நாற்காலி எனில், அருகிலேயே எங்களுக்கும் ஒரு நாற்காலி. உங்களுக்கு முதல்வர் பதவி என்றால், எங்களுக்கு துணை முதல்வர் பதவி. உங்களுக்கு நிதித்துறை எனில் எங்களுக்கு காவல்துறை’’ என்று பகிரங்கமாக பேசினார்.

தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆட்சியில் பங்கு அளித்தால் மட்டுமே கூட்டணி என நிபந்தனை விதிப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுகவுக்கு எதிரான வலுவான கூட்டணி அமைக்க முயற்சித்து வரும் திமுகவுக்கு, இந்த நிபந்தனைகள் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இந்தத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் எதிர்காலமே இல்லை என்கிற அளவுக்கு திமுக பலவீனமடைந்துள்ளது. எனவே, கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை’’ என்றார்.

திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

நம்பிக்கை இழந்துவிடுவர்

கூட்டணி என்றால் இதுவரை தொகுதிகளைத்தான் கேட்பார்களே தவிர, ஆட்சியில் பங்கு யாரும் கேட்டதில்லை. கூட்டணி ஆட்சியா? தனிக்கட்சி ஆட்சியா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தேர்தலுக்கு முன்பாக ஆட்சியில் பங்கு என்று கேட்கத் தொடங்கினால் அவர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர். தேர்தலுக்குப் பிறகு பதவிக்காக சண்டையிட்டுக் கொள்வார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துவிடும். எனவே, எல்லாவற்றையும் மக்களின் முடிவுக்கு விட்டுவிட வேண் டும்.

அவசரப்பட்டு எப்படியாவது ஒரு கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற நிலையில் திமுக இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் கட்சித் தலைமை முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x