Published : 11 Mar 2014 07:09 PM
Last Updated : 11 Mar 2014 07:09 PM

திமுகவுடன் கூட்டணி அமைக்காதது ஏன்?- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விளக்கம்

2ஜி அலைக்கற்றை ஊழலில் திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதால், அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளத் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், இடதுசாரிகளுடன் உறவை தன்னிச்சையாக முறித்துக் கொண்டதற்கு, தொகுதிப் பங்கீடு மட்டும்தான் காரணமா? அல்லது வேறு அரசியல் நோக்கம் உள்ளதா? என்று அதிமுகவுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போட்டியிட முடிவுசெய்துள்ளன. இடதுசாரிகள் தங்களுக்கான பாதையில் மாற்றுக் கொள்கைகளை கம்பீரமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த தேர்தல் களத்தை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்,

வெண்மணி நினைவாலயத் திறப்புவிழாவில் அறிவித்த போது, கூடியிருந்த லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மத்தியில் கைதட்டல் அடங்குவதற்கு சில நிமிடங்கள் ஆனது. இடதுசாரிக் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதை பலத்த கரவொலியோடு மக்கள் வரவேற்றார்கள்.

10-3-2014 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூடி மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போட்டியிடுமென அறிவித்தது. இரண்டு இடதுசாரிக்கட்சிகளும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன என்ற செய்தி இரண்டு கட்சிகளின் அணிகள் மத்தியில் மட்டுமல்ல, இடதுசாரி இயக்கத்திற்கு அப்பாற்பட்ட மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் இருபெரும் இடதுசாரி கட்சிகள் தேர்தல் களத்தில் மட்டும் இணைந்து நிற்கவில்லை. கடந்த காலத்தில் மக்கள் நலனைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இரு கட்சிகளும் இணைந்து நின்றுள்ளன. மதச்சார்பின்மையை பாதுகாப்பதற்கான போராட்டத்திலும் தோளோடு தோள் நின்று போராடி வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக இடதுசாரி கட்சிகள் இணைந்து நிற்பது என்ற முடிவு இருகட்சிகளின் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் உற்சாகத்தையும், ஆரவாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது இயல்பானதே.

முடிவின் பின்னண

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத மதச்சார்பற்ற எதிர்க் கட்சிகளைக் கொண்ட ஒரு மாற்றை உருவாக்குவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. கடந்த அக்டோபர் 30ம் தேதி தில்லியில் வகுப்புவாத எதிர்ப்பு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இடதுசாரிக் கட்சிகளோடு அதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற மாநிலக் கட்சிகளும் கலந்து கொண்டன.

இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 25ம் தேதி நான்கு இடதுசாரி கட்சிகளும் அதிமுக உள்ளிட்ட பல மதச்சார்பற்ற கட்சிகளும் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாற்று அரசு உருவாவதற்கு பாடுபடும் என முடிவெடுத்து அதற்கான பிரகடனத்தையும் வெளியிட்டன. இத்தகைய முயற்சிகள் நாடு தழுவிய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கடந்த பிப்ரவரி 2ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் ஆகியோர் அக்கட்சியின் மாநிலத் தலைவர்களோடு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். பிப்ரவரி 3ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களோடு மாநில முதலமைச்சரை சந்தித்தார். அதிமுகவோடு தொகுதி உடன்பாடு கண்டு போட்டியிடுவது என முடிவானது.

இடதுசாரி கட்சிகளுக்கும், அதிமுக தலைமைக்கும் இடையே தொகுதி உடன்பாட்டிற்காக பிப்ரவரி 5ம் தேதி துவங்கி ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இரண்டு இடதுசாரிக் கட்சிகளுக்கும் அவைகளுடைய பலத்திற்கு ஏற்ப தொகுதி ஒதுக்கீடு செய்ய அதிமுக தலைமை முன் வரவில்லை.

இதற்கு இடையில் அதிமுக தலைமை 24-2-14 அன்று 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. இடதுசாரி கட்சிகள் தங்களது கூட்டணியில் இருப்பதாகவு, அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுவார்கள் என்றும் முதல்வர் கூறினார். ஆனால் அதிமுகவின் அணுகுமுறை காரணமாக உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் மார்ச் 3ம் தேதி அதிமுக பிரச்சாரத்தை துவக்கிவிட்டது. கால தாமதமாகிறது, விரைந்து இடதுசாரிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து உடன்பாடு காண வேண்டுமென்று அதிமுக தலைமைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கடிதம் எழுதியது.

இந்த நிலையில், 4-3-2014 அன்று அதிமுக தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்து "மகிழ்ச்சியாக சேர்ந்தோம், மகிழ்ச்சியாக பிரிவோம்" என உறவை தன்னிச்சையாக முறித்து விட்டு சென்று விட்டார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம் (மார்ச் 4 -5) சென்னையில் நடைபெற்றது. அதிமுக தலைமை உறவை முறித்துக் கொண்டது பற்றி இரண்டாவது நாள் மாநிலக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு விவாதித்தது. அகில இந்திய அளவில் நாடாளுமன்றத் தேர்தலில் வகுப்புவாத எதிர்ப்பு, நவீன தாராளமய எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு போன்ற பிரச்சனைகளோடு இடதுசாரிக் கட்சிகள் முன்வைக்கும் மாற்று கொள்கையை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதும், இதனடிப்படையில் தேர்தலை சந்திப்பது என்பதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் உத்தியில் முக்கியமான அம்சங்கள்.

கடந்த 10 ஆண்டு காலமாக திமுகவும் பங்கேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைப்பிடித்து வரும் தாராளமய பொருளாதாரக் கொள்கை அனைத்துப்பகுதி மக்களையும் கடுமையாக பாதித்து வருகிறது. பொருளாதார கொள்கையில் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு கிடையாது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக மக்களுக்கு ஏற்பட்டு வரும் அதிருப்தியை வகுப்புவாத மோதலை உருவாக்கி திசை திருப்பி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சித்து வருகிறது.

மேலும் சுதந்திர இந்தியாவில் வரலாறு கண்டிராத ரூ.1,76,000 கோடி 2ஜி அலைக்கற்றை ஊழலும், ரூ.1,86,000 கோடி நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழலும், கிருஷ்ணா- கோதாவரி படுகை, எரிவாயு (ரிலையன்ஸ்க்கு) விலை நிர்ணயிப்பதில் பல ஆயிரம் கோடி மெகா ஊழல்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் நடைபெற்றுள்ளன. 2ஜி அலைக்கற்றை ஊழலில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை நாடறியும்.

எனவே, தமிழகத்தில் அதிமுகவுடன் உறவு முறிந்த காரணத்தினால் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு உடன்பாடு வைத்துக் கொள்ள தேவையில்லை என 5-3-2014 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்தது. 6-3-2014 அன்று சிபிஐ(எம்) மற்றும் சிபிஐ கட்சித் தலைவர்கள் சந்தித்து ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவு செய்தனர். 10-3-2014 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்ததையொட்டி இரண்டு இடதுசாரிக் கட்சிகளும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க உள்ளன.

நோக்கம் என்ன?

இடதுசாரிக் கட்சிகளுடன் அதிமுக தலைமை உடன்பாட்டிற்கு வராததற்கான உண்மையான காரணத்தை இன்னும் அந்த கட்சித் தலைமை அறிவிக்கவில்லை. இடதுசாரிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதி ஒதுக்கீடு செய்வது என்ற எண்ணிக்கைதான் காரணமா? அல்லது வேறு அரசியல் நோக்கம் காரணமா? என்பதை இப்போது அறுதியிட்டுக் கூற முடியாது என்றாலும் போகப்போக புரியும். இது குறித்து பல்வேறு யூகங்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங் பரிவாரங்களின் வகுப்புவாதத்தை எதிர்த்து இடதுசாரி கட்சிகளே உறுதியாகப் போராடி வருகின்றன.

1999- 2004 வரையிலான பாஜக தலைமையிலான ஆட்சியின்போதும், 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதும் கடைப்பிடிக்கப்பட்ட தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் உழைக்கும் மக்களைத் திரட்டி பொது வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டத்தை நடத்திட முன்முயற்சி எடுத்ததும் போராட்டத்தில் முக்கியப் பாத்திரம் வகித்ததும் இடதுசாரிகளே.

2ஜி அலைக்கற்றை ஊழல் மீது விசாரணை நடத்த வேண்டுமென்றும், நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பிரதமருக்கு முதன் முதலில் கடிதம் எழுதியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி. இதைப்போலவே, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலையும், எரிவாயு விலை நிர்ணய ஊழலையும் அம்பலப்படுத்தியதும் இடதுசாரிக்கட்சிகளே.

புதிய நம்பிக்கை

மேலும், தமிழகத்தில் மக்கள் நலனுக்காக இடைவிடாது குரலெழுப்பி வருவது இடதுசாரிக் கட்சிகளும், இடதுசாரிகள் தலைமையிலான வெகுமக்கள் அமைப்புகளுமே என்பதை யாரும் மறுக்க முடியாது.

இத்தகைய இடதுசாரிக்கட்சிகளை புறக்கணித்து தேசிய அளவிலோ, மாநில அளவிலோ ஒரு சரியான மாற்றை யாராலும் உருவாக்கிட முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வெண்மணியில் குழுமியிருந்த லட்சோபலட்சம் மக்களிடையே குறிப்பிட்டார்.

அடுத்த சில தினங்களில் இரண்டு கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்பதோடு, போட்டியிடும் வேட்பாளர்களையும் அறிவிக்க உள்ளன.

நாட்டின் விடுதலைக்காகவும், விடுதலைக்குப் பிறகு மக்கள் நலனுக்காகவும் எண்ணற்ற இயக்கங்கள் நடத்தி, அளப்பரிய தியாகங்களைச் செய்த இடதுசாரிகள் மக்களவைத் தேர்தலை இணைந்து சந்திப்பது மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது" என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x