Last Updated : 06 Jul, 2015 10:30 AM

 

Published : 06 Jul 2015 10:30 AM
Last Updated : 06 Jul 2015 10:30 AM

பருவம் தவறிய மழையால் கிருஷ்ணகிரியில் பாதிப்பு: தரமில்லா மாங்கனிகளால் மாங்கூழ் ஏற்றுமதி குறைந்தது

பருவம் தவறிய மழையால் மாங்கூழ் உற்பத்தி பாதிக்கப்பட்டு, நடப்பாண்டில் வெளிநாட்டு ஏற்றுமதி குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மாம்பழம் உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இம்மாவட்டத்தில் சுமார் 47 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, மாங்கூழ் தயாரிக்க பயன்படும் தோத்தாபுரி (பெங்களூரா), அல்போன்ஸா உள்ளிட்ட ரகங்கள் அதிக அளவில் இங்கு சாகுபடி செய்யப்படுகின்றன.

மாங்கூழ் தொழிற்சாலைகளில், பீப்பாய்களில் ஆஸ்பெடிக் முறையில் பிளாஸ்டிக் பேரல்களில் காற்று புகாவண்ணம் மாங்கூழ் நிரப்பப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் அந்நிய செலாவணியாக ரூ.500 கோடி வரை கிடைக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்கூழ் தயாரிக்க ஆரம்பிக்கப்பட்ட 77 தொழிற்சாலைகளில், கடந்த ஆண்டு 40 மட்டுமே இயங்கின. இந்த ஆண்டில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மாங்கூழ் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மே மாத தொடக்கத்தில் மாங்கூழ் தயாரிக்கும் பணியில் தொழிற்சாலைகள் ஆர்வம் காட்டும். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் பெய்த மழையின் காரணமாக ஜூன் 10-ம் தேதிக்கு பின்னரே மாங்கூழ் உற்பத்தி தொடங்கியது. இதனால் உலக நாடுகளுக்கு மாங்கூழ் ஏற்றுமதி குறைவாக இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மாங்கூழ் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தேவராஜ் குரூப்ஸ் மதியழகன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

மாங்காய்கள் அறுவடைக்குத் தயாரான நிலையில் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக, காய்களில் சர்க்கரை சத்து குறைவாகவும், ஈரப்பதம் அதிகரித்து அழுகும் நிலையில் தரம் குறைந்தது. தோத்தாபுரி (பெங்களூரா) மாங்காய் கிலோ ரூ.16-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது. நடப்பாண்டில், 60 சதவீதம் மாங்கூழ் மட்டுமே தயாராகும். இதில் உள்நாட்டு தேவைக்கு போக, 30 சதவீதத்துக்குள் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும்.

சுகாதாரமான, சுவை கொண்ட மாங்கூழ் தயாரிக்கக் குறைவான நாட்களே கிடைத்துள்ளதால், பெரும்பாலான தொழிற்சாலைகள் முதலீடு செய்ய அச்சம் காட்டுகின்றன. மாங்கூழ் ஏற்றுமதி குறைந்தால், வெளிநாட்டு நுகர்வோர், மாற்று குளிர்பானங்களை நாடும் சூழ்நிலை உருவாகும்.

குறிப்பாக தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மா சுவை கொண்ட பழங்கள் மூலம் குளிர்பானம் தயாரிக்கின்றனர். விவசாயிகள் பூக்கள் பூக்கும் பருவத்தை கணக்கில் கொண்டு அறுவடையை தொடங்க வேண்டும். எனவே இந்த ஆண்டில் உலகநாடுகளுக்கு மாங்கூழ் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x