Published : 29 Jul 2015 01:37 PM
Last Updated : 29 Jul 2015 01:37 PM

ராமேசுவரத்தில் கலாமுக்கு தலைவர்கள், பிரபலங்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறுதி அஞ்சலி

ராமேசுவரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராமேசுவரத்தில் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மதுரையில் இருந்து மண்டபம் கொண்டு செல்லப்பட்ட கலாம் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து ராணுவ வாகனத்தில் கலாம் உடல் ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது.

வழி நெடுகிலும் சாலையில் இரு புறங்களிலும் பொதுமக்கள் குவிந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

ராமேசுவரத்தில் பேருந்து நிலையம் அருகே மைதானத்தில் கலாமின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராமேசுவரத்தில், அவரது உடலுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், மனோகர் பரிக்கர், பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் வடிவேலு, விவேக் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

நீதிமன்றங்களுக்கு நாளை விடுமுறை

தமிழகத்தில் உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களுக்கும் நாளை விடுமுறை என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பொன். கலையரசன் கூறியுள்ளார்.

ஸ்டாலின் கோரிக்கை

''கலாம் அடக்கம் செய்யப்படும் இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரிக்கு அப்துல் கலாம் பெயரை சூட்ட வேண்டும்'' என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜி.கே.வாசன் கோரிக்கை

''நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிப் புத்தகங்களிலும் கலாமின் சாதனைகள் இடம்பெற வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.



மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்துல் கலாம் திடீரென மயங்கி விழுந்தார். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர், உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், கலாம் மாரடைப்பால் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

அப்துல் கலாமின் உடல் மேகால யாவில் இருந்து நேற்று காலை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மதுரை கொண்டு செல்லப்பட்டது:

கலாமின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி அவரது உடல் ராணுவ விமானம் மூலம் இன்று (புதன் கிழமை) மதுரை கொண்டு வரப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் ஆளுநர் ரோசய்யா, கலாம் உடலைப் பெற்றுக் கொண்டார். அவரது உடலுக்கு ஆளுநர் ரோசய்யா, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது.

முதல்வர் பங்கேற்பில்லை:

உடல்நிலை காரணமாக தன்னால் தற்போது பயணம் மேற்கொள்ள இயலாததால் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், "ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. எனவே, அவரது இறுதிச் சடங்கில் பங்குகொண்டு எனது மரியாதையை செலுத்த வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இருப்பினும், எனது உடல்நிலை காரணமாக என்னால் தற்போது பயணம் மேற்கொள்ள இயலவில்லை.

எனவே, எனது சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும், ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 அமைச்சர்கள் ராமேசுவரம் சென்று இறுதி மரியாதை செலுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், மறைந்த அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அன்னாரது இறுதிச்சடங்கு நடைபெறும் நாளான 30.7.2015 அன்று அரசு விடுமுறை அளிக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பங்கேற்கிறார்:

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இத்தகவலை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு உறுதி செய்துள்ளார்.

டெல்லி பாலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்ய நாயுடு, "முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். நாளை அதிகாலை ராமேசுவரம் வந்தடையும் பிரதமர் அங்கு காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பிரதமருடன் சில மாநில முதல்வர்களும் கலந்து கொள்வார்கள்" என்றார்.

இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்கு:

அப்துல் கலாமின் உடல், ராமேசுவரத்தில் இஸ்லாமிய முறைப்படி வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து கலாமின் பேரன் ஷேக் சலீம் கூறும்போது, "கலாமின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் வேகமாக செய்து வருகிறது.

இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆந்திரா உட்பட 6 மாநிலங்களின் முதல்வர்கள், மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x