Published : 27 Jul 2015 11:01 PM
Last Updated : 27 Jul 2015 11:01 PM

கலாமின் கனவுகளை நிறைவேற்றுவதே உண்மையான அஞ்சலி: ராமதாஸ்

அப்துல் கலாமின் கனவுகளை நிறைவேற்றுவது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், '' இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், புகழ் பெற்ற அறிவியலாளருமான அப்துல்கலாம் உடல்நலக் குறைவால் ஷில்லாங் நகரில் காலமானார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

கலாமின் மறைவு என்னை நிலைகுலையச் செய்திருக்கிறது. அவரை இழந்து வாடும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து மறைந்தவர் அப்துல்கலாம். ராமேஸ்வரத்தில் சாதாரண தமிழ் குடும்பத்தில் பிறந்த அவர், அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து முதலில் பொறியாளராகவும் பின்னர் அறிவியலாளராகவும், தொடர்ந்து குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தவர். தமிழையும், திருக்குறளையும் நேசித்தவர் என்பது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

குழந்தைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது மிகுந்த பாசமும், அக்கறையும் கொண்டவர். குடியரசுத் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்தாலும் அதிகாரத்தை சுயநலனுக்காக பயன்படுத்தாதவர். தமது குடும்பத்தினரைக் கூட குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்க வைக்காதவர். குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஆடம்பர மாளிகைகளைத் தவிர்த்து சாதாரண வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தவர்.

குடியரசுத் தலைவராக இருந்தபோது தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை நிராகரித்து அவர்களை தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என்று பல முனைகளிலிருந்து அழுத்தம் தரப்பட்ட போதிலும், ஒரு மனு தவிர மற்ற மனுக்கள் மீது தமது பதவிக்காலம் முடிவடையும் வரை முடிவெடுக்காமல் அவர்களைக் காப்பாற்றியவர்.

குடியரசுத் தலைவர், பேராசிரியர், அறிவியலாளர் என பல முகங்களை அவர் கொண்டிருந்தாலும் தலைசிறந்த மனிதனாக விளங்கியவர். அன்பு, கருணை, பாசம், அக்கறை, மனித நேயம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்தவர். அவரது மறைவு இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

நதிகள் இணைப்பு, மது ஒழிப்பு, தூக்குத் தண்டனை ரத்து ஆகியவை அவரது விருப்பமாகவும், நோக்கமாகவும் இருந்தன. இவை நிறைவேறினால் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அவரது இன்னொரு கனவும் நனவாகிவிடும். எனவே, அப்துல் கலாமின் கனவுகளை நிறைவேற்றுவது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x