Published : 28 Jul 2015 02:15 PM
Last Updated : 28 Jul 2015 02:15 PM

இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் கலாம்: முத்தரசன் புகழஞ்சலி

தலைசிறந்த விஞ்ஞானியாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் அப்துல் கலாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''நமது இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

அப்துல் கலாம் இந்தியாவின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவராக பதவி வகித்த போதிலும் அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தமிழகத்துக்கே பெருமை அளித்தது.

தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் 1931 ல் பிறந்தவர் டாக்டர் அப்துல் கலாம். ஒரு படகோட்டியின் மகனாக சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தனது சிறுவயதில் தனது ஒன்று விட்ட சகோதரருக்கு உதவியாக வீடு வீடாக சென்று சைக்கிளில் செய்தித்தாள் போடும் வேலையை செய்தவர். சிறு வயதில் மாணிக்கம் என்ற கம்யூனிஸ்ட் தோழருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர். அவர் வழங்கிய பல்வேறு நூல்களை விருப்பமுடன் படித்தவர்.

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையிலும்,விண்வெளி ஆராய்ச்சித் துறையிலும் விஞ்ஞானியாக பணிபுரிந்தவர். தலை சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்தவர். 1980 ல் ஏவப்பட்ட ரோகிணி செயற்கைக் கோள் திட்டத்தின் இயக்குநராக சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்.

ஏவுகணைத் திட்டங்களிலும் சிறப்பாக பணியாற்றியவர். திரிசூல்,அக்னி,பிருத்வி போன்ற ஏவுகணைகள் தயாரிப்பு திட்டங்களிலும் திட்ட இயக்குநராக இருந்து தனது திறமையை வெளிப்படுத்தியவர்.

ஏவுகணை தயாரிப்பு மற்றும் விண்வெளித்துறையில், இந்திய அறிவியல் தொழில் நுட்பத்தை வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் அளவிற்கு வளர்த்திட பங்காற்றியவர்.

மருத்துவத் துறையில் பல்வேறு புதிய கருவிகளையும் ,இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேஸ் மேக்கர் போன்ற கருவிகளையும் உருவாக்கியவர்.

சிறந்த இலக்கியவாதி. திருக்குறளை நேசித்தவர். கர்நாடாக சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். வீணை வாசிப்பதில் மிகுந்த திறமை மிக்கவர். எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பிரியம் கொண்டவர். அவர்களுடன் கலந்துரையாடுவதில் ஆர்வம் காட்டியவர். பத்ம பூஷண், பத்ம விபூஷண், பாரத ரத்னா உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றவர்.

டாக்டர் அப்துல் கலாமின் திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவரது மறைவு இந்திய அறிவியல் தொழில் நுட்பத்துறைக்கும், நாட்டிற்கும் பேரிழப்பாகும். அப்துல் கலாம் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துகொள்கிறது'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x