Published : 11 May 2014 12:00 PM
Last Updated : 11 May 2014 12:00 PM

மீத்தேன் எரிவாயு திட்டத்தால் டெல்டா மாவட்டங்கள் பாழாகும்: ஆவணப்படம் வெளியிட்டது மே 17 இயக்கம்

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மீத்தேன் எரிவாயுவை எடுப்பதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த ஆவணப் படம், சென்னை தி.நகரில் உள்ள செ.தெய்வநாயகம் பள்ளியில் சனிக்கிழமை மாலை திரையிடப்பட்டது.

இதுதொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியதாவது:

நாலாயிரம் ஆண்டுகள் பழமையானதும் 44 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ளதுமான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் டெல்டா மாவட்டங்கள் ஆசியாவிலேயே மிகவும் தொன்மையான உணவுச் சமவெளியாகும். தமிழகத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் டெல்டா மாவட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இங்கு மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், காவிரி டெல்டாவில் பூமியிலிருந்து 6 ஆயிரம் அடிக்கு கீழே துளையிட்டு அங்குள்ள நிலக்கரி படிமத்திலிருந்து மீத்தேன் வாயு எடுக்கப்படும். ஒரு ஆழ்துளைக் கிணற்றில் மீத்தேன் வாயு எடுக்க மட்டும் 5 கோடியே 66 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். சுமார் 2 ஆயிரம் கிணறுகள் இதுபோல் தோண்டப்பட உள்ளன. அப்படிப் பார்த்தால் டெல்டா பகுதி முழுவதும் 4 டிஎம்சி தண்ணீர் இத்திட்டத்துக்காக உறிஞ்சி எடுக்கப்படும்.

மீத்தேன் வாயு எடுப்பதன் மூலம் வெளியேறுகிற கதிரியக்க கழிவுகள் மற்றும் வேதிப் பொருட்களை வயல்வெளிகளில் கொட்டுவதால் விளைநிலங்கள், கால்நடைகள் பெருமளவில் பாதிக்கப்படும். எனவே, இந்தப் பிரச்சினைகளை மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

இவ்வாறு அவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x