Published : 01 Jul 2015 01:13 PM
Last Updated : 01 Jul 2015 01:13 PM

கட்டணம் மிக அதிகம்: சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த விஜயகாந்த் கருத்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்களுடன் பயணம் செய்தார்.

சென்னை ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில், ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு மெட்ரோ இரயில் நிலையம் வரை பொதுமக்களுடன் பயணம் செய்தார். அவருடன் தேமுதிக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் உடன் பயணம் செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், "மெட்ரோ ரயில் இயக்கப்படும் மற்ற நகரங்களில் கட்டணம் குறைவாகவே இருக்கிறது. எனவே, சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் மிக அதிகம். அதைக் குறைக்க வேண்டும்.

மெட்ரோ ரயில் திட்டம் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது என்பதாலேயே, ஜெயலலிதா இத்திட்டத்தை நேரில் வந்து துவக்கிவைக்காமல், காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்துள்ளார்" என்றார்.

கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் கால அவகாசம் இருப்பதால், இப்போது அது பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை" என்றார்.

முன்னதாக , இன்று காலை கோயம்பேடு நிலையத்திலிருந்து ஆலந்தூர் வரை பயணம் செய்தார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x