Published : 25 Jul 2015 08:44 AM
Last Updated : 25 Jul 2015 08:44 AM

திண்டுக்கல் அருகே மான் வேட்டையாடிய 6 பேர் கைது: தப்பி ஓடிய சப்-இன்ஸ்பெக்டருக்கு வலை

திண்டுக்கல் அருகே மான் வேட்டையில் ஈடுபட்டதாக மருத்துவர், தொழிலதிபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய எஸ்ஐ-யை போலீஸார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, சிறுமலை, வத்தலகுண்டு மற்றும் கொடைக்கானல் காப்புக் காடுகள் யானை, சிறுத்தை, புள்ளிமான் உள்ளிட்ட விலங்குகளின் புகலிடமாக உள்ளன. இவைகளை இறைச்சிக்காகவும், மருந்துக்காகவும் மர்மக் கும்பல் வேட்டையாடி கடத்தி விற்று வருகிறது.

இந்நிலையில், ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு காப்புக் காட்டில், ஒரு கும்பல் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வனஅலுவலர் சம்பத்துக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், ஒட்டன்சத்திரம் ரேஞ்சர் செந்தில்குமார் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது 4 வயது கடமானை வேட்டையாடி எடுத்துச் செல்ல முயன்ற 6 பேரைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் திசையன்விளையைச் சேர்ந்த மருத்துவர் அருண்குமார் கிறிஸ்டோபர், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் சண்முகவேல், ஈஸ்வரன், ஒட்டன்சத்திரம் ரமேஷ், மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் முகமது சுவான், சுல்தான் அக்பர்அலி ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களை நேற்று கைது செய்து இவர்களிடம் இருந்து துப்பாக்கி, டெலஸ்கோப், கேமராக்கள், வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் தவிர தலைமறைவான போலீஸ் எஸ்ஐ உட்பட மேலும் பலரைத் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் சிக்கிய அனைவரும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் என்பதால், அவர்களை விடுவிக்க அரசியல்வாதிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து வனத்துறையினருக்கு நெருக்கடி அளிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. அதனால், எஸ்ஐ-யை முதலில் பிடித்த வனத்துறையினர் போலீஸ் அதிகாரிகள் சிலரின் நெருக்கடியால் அவரை விடுவித்ததாகவும் கூறப்படுகிறது

மூளையாகச் செயல்பட்ட எஸ்ஐ

இதுகுறித்து மாவட்ட வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பத்துக்கும் மேற்பட்டோர் வாகனங்களில் வந்து நள்ளிரவில் வேட்டையாடி உள்ளனர். அவர்களில் 6 பேரை மட்டும் கைது செய்துள்ளோம். தப்பியோடிய போலீஸ் எஸ்ஐ ஒருவரைத் தேடி வருகிறோம். யாரையும் தப்பவிடவில்லை. அவர்தான், மான் வேட்டைக்கு மூளையாகச் செயல்பட்டுள்ளார். திசையன்விளை மருத்துவர் அருண்குமார் கிறிஸ்டோபர், நண்பர்களுடன் மான் வேட்டைக்குச் செல்வதை பொழுதுபோக்காகக் கொண்டுள் ளார். திருநெல்வேலி மாவட்டத்தி லும் இவர்கள் இதுபோல, அடிக்கடி வனவிலங்குகளை வேட்டையாடச் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x