Published : 23 Jul 2015 08:45 AM
Last Updated : 23 Jul 2015 08:45 AM

சென்னையில் கன மழை

சென்னையில் நேற்று திடீரென கன மழை பெய்து நகரை மேலும் குளிர்ச்சியடையச் செய்தது.

நகரில் காலை முதல் வெயில் தணிந்தே காணப்பட்டது. மதிய வேளையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4.30 மணியளவில் திடீரென வானம் இருண்டு மழை பெய்ய ஆரம்பித்தது. சென்னையின் பல பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது. ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது.

தாம்பரம், குரோம்பேட்டை, பழவந்தாங்கல், நங்கநல்லூர், சைதாப்பேட்டை, கிண்டி, தி.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, பாரிமுனை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ராயபுரம், காசிமேடு என பல பகுதிகளில் நேற்று மழை பெய்தது.

ஒரு சில பகுதிகளில் சில நிமிடங்கள் மட்டுமே மழை பெய்திருந்தாலும், சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. எனவே அலுவலகம் முடித்து வீடு திரும்புவோர் வாகன நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக மாலையிலும் இரவிலும் மழை பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 28.2 மி.மீ., சனிக்கிழமை 13.3 மி.மீ., ஞாயிற்றுக்கிழமை 18.6 மி.மீ. மழை பெய்தது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை லேசான மழை பெய்தது. அதே போல் நேற்று மாலையிலும் மழை பெய்தது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை தொடரும். அதிகபட்ச வெப்பம் 37 டிகிரியாகவும் குறைந்தபட்ச வெப்பம் 28 டிகிரியாகவும் இருக்கும். மாலை அல்லது இரவு நேரத்தில் நகரத்தில் ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x