Published : 21 Jul 2015 09:43 PM
Last Updated : 21 Jul 2015 09:43 PM

ராமேசுவரம் அருகே சயனைட் குப்பிகளுடன் மூவர் கைது

ராமேசுவரம் அருகே உச்சிப்புளியில் இலங்கைக்கு சயனைட் குப்பிகளை காரில் எடுத்துச் சென்ற இலங்கை அகதி உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தனுஷ்கோடி கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவது கடந்த ஒரு மாத காலமாக அதிகரித்துள்ளதால் காவல்துறையினர் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திங்கட்கிழமை இரவு உச்சிப்புளி பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது காரில் வந்த மூவர் சந்தேகத்திற்குரிய முறையில் பதிலளித்தால் காரை சோதனை செய்தனர்.

சோதனையின் போது காரிலிருந்து 75 சயனைட் குப்பிகள், 300 கிராம் சயனைட் பவுடர், 4 ஜி.பி.எஸ் கருவிகள், 7 தொலைப்பேசிகள், இந்தியப் பணம் ரூ. 46, 200 மற்றும் இலங்கை பணம் ரூ. 19,300 ஆகியவற்றை பறிமுதல் செய்து காரில் இருந்த மூவரையும் உச்சிப்புளி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இலங்கை கிளிநொச்சி பகுதியை சார்ந்த கிருஷ்ணகுமார், உச்சிப்புளியை சார்ந்த சசிக்குமார், நாகாச்சியை சார்ந்த ராஜேந்திரன் என்பது தெரிய வந்தது. மேலும் மூவரும் ராமேசுவரம் கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருட்களை கடத்த முயன்றது தெரியவந்தது.

செவ்வாய்கிழமை காலை கேணிக்கரை காவல்நிலையத்தில் மூவரையும் விசாரித்த போது கிருஷ்ணகுமார் 2009ம் ஆண்டு இலங்கையில் இருந்து அகதியாக வந்த திருச்சி அகதி முகாமில் பதிவு செய்து வசித்து வந்தார் என்பது தெரியவந்தது.

இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு தீவிர பிரச்சாரங்கள் நடைபெற்று வரும் சூழலில் ராமேசுவரம் அருகே சயனைட் குப்பிகளுடன் இலங்கையர் ஒருவரை கைது செய்திருப்பதால் தேர்தலை சீர்குலைக்க விடுதலைப் புலிகள் சதி செய்கிறதா என்கிற கோணத்தில் காவல்துறையினர் மூவரையும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x