Published : 07 Jun 2015 03:26 PM
Last Updated : 07 Jun 2015 03:26 PM

சென்னை தனியார் பள்ளி பிரச்சினைக்கு தீர்வு காண்க: அரசுக்கு இ.கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை பால வித்யா மந்திர் பள்ளிப் பிரச்சினையில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை அடையாரில் பால வித்தியா மந்திர் என்ற தனியார் பள்ளி நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில 1400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

பாரம்பரியம் மிக்க இந்தப்பள்ளியில் அண்மைக் காலமாக ஊழலும் நிர்வாகச் சீர்கேடுகளும் அதிகரித்துள்ளன. தொடக்கக்காலத்தில் இலாப நோக்கமின்றி செயல்பட்ட இக்கல்வி நிறுவனம் இப்பொழுது பல்வேறு கட்டணங்கள் மூலம் மிகுந்த லாபம் ஈட்டும் வகையில் செயல்படுவதாக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.32,000 முதல் 39,000 வரை அரசு நிர்ணயித்துள்ளது. அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை செலுத்தும் மாணவர்களுக்கு அரைநாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், இதர மாணவர்களுக்கு முழு நேரம் வகுப்பு நடத்தப்படுவதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தும் மாணவர்கள் பல்வேறு வகையிலும் பாரபட்சப்போக்குடன் நடத்தப்படுகின்றனர்.

பள்ளி நிர்வாகம் நிர்ணயிக்கும் கட்டணத்தை செலுத்தும் மாணவர்களுக்கு மட்டும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாகவும், பல்வேறு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு சிறப்புப் பயிற்சிகளுக்காக ரூ.90,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாணவர்களிடையே இவ்வாறு பாரபட்சம் காட்டப்படுவது சமச்சீர் கல்வி நோக்கத்திற்கே எதிரானது.

இது மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வையும், பாகுபாட்டையும் உருவாக்கும். இந்த பாரபட்ச செயல் கண்டனத்திற்குரியது.

பள்ளி நிர்வாகத்தின் இந்த மோசமான போக்கைக் கண்டித்து கடந்த ஒருவார காலமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராடிவருகின்றனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் ஊழலை கண்டித்து ஆசிரியர்களும் போராடி வருகின்றனர்.

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சாதகமாக செயல்பட்டதாக, இப்பள்ளியின் முதன்மை நிர்வாகி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.பள்ளி முதல்வர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப்பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிடவேண்டும். மாணவர்களின் படிப்பு பாதிக்காதவாறும், பாரபட்சம் களையப்படும் வகையிலும், ஊழல்கள் முறைகேட்டை களையும் வகையிலும் உரிய தீர்வைக் காணவேண்டும்.

பள்ளி நிர்வாகத்தால் பள்ளி முதன்மை நிர்வாகி மற்றும் பள்ளி முதல்வர் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x