Published : 10 Jun 2015 03:46 PM
Last Updated : 10 Jun 2015 03:46 PM

ஆயுத தொழிற்சாலைகளில் ஆள் தேர்வு முறைகேடு: ராமதாஸ் குற்றச்சாட்டு

’கடந்த 5 ஆண்டுகளாகவே வட இந்திய மாணவர்கள் ஆள்மாறாட்டம் மூலம் கனரக தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்துள்ளனர். இது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆணையிட வேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமாக நாடு முழுவதும் 41 ஆயுத மற்றும் வாகன ஆலைகள் உள்ளன. இவற்றில் 6 ஆலைகள் தமிழகத்தில் ஆவடி, திருச்சி, நீலகிரி அரவங்காடு ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இந்த ஆலைகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டதன் நோக்கமே தமிழர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பது தான். ஆனால், உண்மை நிலை வேறு மாதிரியாக உள்ளது.

பாதுகாப்புத் துறைக்கு சொந்தமாக தமிழகத்திலுள்ள தொழிற்சாலைகளில் ஆவடியில் உள்ள கனரக ஊர்தித் தொழிற்சாலை மிகவும் முக்கியமானதாகும். இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய வலிமையாக கருதப்படும் அர்ஜுன், ஜி-90 உள்ளிட்ட பலவகையான டாங்குகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

2010 ஆம் ஆண்டு வரை இந்த நிறுவனத்தில் பணி மற்றும் பயிற்சியில் சேர்வதற்கான ஆள் தேர்வு வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. அதன்பின் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் முறைகேடான வழிகளில் ஆவடி ஆலையில் திணிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதை உறுதி செய்வதைப் போன்ற சில நிகழ்வுகள் அண்மைக்காலத்தில் அரங்கேறி வருகின்றன.

ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலைக்கு மெஷினிஸ்ட், பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு 399 பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி நடைபெற்றது. அத்தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களில் 45 விழுக்காட்டினர் பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதன்பின், கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி தொழில் பழகுனர் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பான்மையினரும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான்.

இந்த இரு தேர்வுகளிலும் பங்கேற்க விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கு பதிலாக நன்கு படித்த வேறு ஆட்களை அனுப்பி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த இரு தேர்வுகளின் போதும் விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதிலாக தேர்வு எழுத வந்தவர்களை தேர்வுக்கூட அதிகாரிகள் பிடித்துள்ளனர். ஆனால், அவர்களை அங்கிருந்த காவல்துறையினரிடம் ஒப்படைக்காமல் தப்பிக்க விட்டுள்ளனர்.

அவ்வாறு தப்பிச் சென்றவர்களில் ஒருவர், ‘‘ஆள்மாறாட்டம் செய்தவர்களில் என்னைப் போன்ற சிலரை வேண்டுமானால் கைது செய்திருக்கலாம். ஆனால், வட இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் ஆள்மாறாட்டம் செய்பவர்கள் தான். முடிந்தால் அவர்களைப் பிடித்துப் பாருங்கள்’’ என்று சவால் விட்டு சென்றிருக்கிறார். முறைகேடு செய்பவர்களின் இந்த மிரட்டல் அதிர்ச்சியளிக்கிறது.

அதைத் தொடர்ந்து மே-2ஆம் தேதி நடந்த மெஷினிஸ்ட், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்காக வந்தவர்களிடம் செய்யப்பட்ட கைரேகை ஆய்வில் 3 பேர் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதேபோல், தொழில் பழகுனருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 5 முதல் 7ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஆள்மாறாட்டம் செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது மலையளவு மோசடியில் எள் முனையளவு தான். கடந்த 5 ஆண்டுகளாகவே வட இந்திய மாணவர்கள் ஆள்மாறாட்டம் மூலம் கனரக தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்துள்ளனர். இதற்கு வடமாநில அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆவடியில் உள்ள படைத்துறை உடைத் தொழிற்சாலையில் எழுத்துத் தேர்வு முடிந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 30 பேரில் 28 பேர் வட இந்தியர் ஆவர். தமிழகத்தில் மீதமுள்ள நான்கு ஆலைகளிலும் இதேபோல் ஆள்மாறாட்டம் செய்து ஏராளமான வட இந்தியர் பணியில் சேர்ந்திருப்பதை அறிய முடிகிறது.

எனவே, இதுகுறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு வசதியாக தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ள பணி நியமனங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆணையிட வேண்டும். இந்த விசாரணையில் தவறு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுவதுடன் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, ஆவடி கனரக வாகன ஆலையில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற போட்டித்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக, தமிழர்களுக்கு இன்னும் ஒரு துரோகமும் இழைக்கப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட ஆணையின்படி, மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலைக்கு கீழாக உள்ள அனைத்து பணிகளும் உள்ளூர் மக்களைக் கொண்டு தான் நிரப்பப்பட வேண்டும்.

ஆனால், அதற்கு மாறாக இந்தியா முழுவதும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவதால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறி போகிறது. இதைத்தடுக்க அடிப்படை பணியாளர் பணியிடங்கள் தமிழர்களைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x