Published : 29 Jun 2015 06:15 PM
Last Updated : 29 Jun 2015 06:15 PM

மெட்ரோ ரயில் கட்டணம் பகல் கொள்ளைக்கு இணையானது: ராமதாஸ்

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் பகல் கொள்ளைக்கு இணையானதாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை மெட்ரோ ரயில் சேவை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. சென்னை பெருநகரத்தின் அடையாளங்களில் ஒன்றாகவும், போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைக்கும் வகையிலும் இந்தத் திட்டம் அமையும் என்றும் உறுதியாக நம்பலாம்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அதிமுக அரசு செய்த அரசியல் மன்னிக்க முடியாதது ஆகும். சென்னை கோயம்பேட்டில் தொடங்கி ஆலந்தூர் வரையிலான பெருநகரத் தொடர்வண்டித் திட்டப் பாதை அமைக்கும் பணிகள் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து விட்டன. கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இத்திட்டத்தின் சோதனை ஓட்டம் தொடங்கிவிட்டது.

கடந்த 06.11.2013 அன்று இந்த சோதனை ஓட்டத்தை அப்போது முதல்வராக இருந்த இதே ஜெயலலிதா தான் தொடங்கி வைத்தார். அதன்பிறகு மீதமுள்ள பணிகளும் முடிவடைந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே வணிக அடிப்படையிலான இயக்கத்தைத் தொடங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாராகிவிட்டது. தொடக்க விழாவுக்கான தேதியை தமிழக அரசு நிர்ணயித்தால் பாதுகாப்பு சோதனையை உடனடியாக முடித்து சேவையைத் தொடங்கத் தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் கடிதம் எழுதியது.

ஆனால், ஜெயலலிதா மீண்டும் அமைச்சரான பிறகு தான் இத்திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கூறிவிட்டதால் இத்திட்டம் 8 மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இத்திட்டத்தின் பயன்களை கடந்த 8 மாதங்களாக பொதுமக்கள் அனுபவிக்க முடியாமல் தடுத்த பெரும் பாவத்தை அதிமுக அரசு செய்திருக்கிறது.

மெட்ரோ ரயில் திட்டத்தின் தொடக்க விழாவை தமது குடும்ப விழாவைப் போல ஜெயலலிதா நடத்தியிருக்கிறார். மெட்ரோ ரயில் திட்டம் தமிழக அரசின் திட்டம் இல்லை. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து தான் மெட்ரோ ரயில் நிறுவனம் என்ற சிறப்பு பயன்பாட்டு அமைப்பை ஏற்படுத்தி இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளன.

எனவே, இதுபோன்ற விழாக்களில் மத்திய அரசின் பிரதிநிதிகளையும், திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியில் உள்ள மாநிலங்களவை, மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களையும், மாநாகராட்சி மேயர் மற்றும் உறுப்பினர்களையும் அழைத்து தொடக்க விழாவை நடத்துவது தான் சரியானதாக இருக்கும். ஆனால், அனைத்தும் தாம் தான் என்ற தன்முனைப்பில் உள்ள ஜெயலலிதா தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்தி இந்த திட்டத்தின் தொடக்க விழாவை நடத்தியுள்ளார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இதற்கெல்லாம் மேலாக மெட்ரோ ரயில் சேவைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரையிலான 10 கி.மீ. தொலைவுக்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சிறப்பு வகுப்புகளுக்கு ரூ.80 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பகல் கொள்ளைக்கு இணையானதாகும்.

இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவைக்கெல்லாம் தாயாக கருதப்படுவது டெல்லி மெட்ரோ ரயில் சேவையாகும். கோயம்பேடு - ஆலந்தூர் இடையிலான அதே 10 கி.மீ தொலைவு கொண்ட டெல்லி கரோல்பாக்கிலிருந்து விதான் சபா செல்வதற்கு டெல்லி மெட்ரோ ரயில் சேவையில் ரூ.16 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

டெல்லியை விட சென்னை மெட்ரோ ரயிலில் 250% அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், டெல்லியில் குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.8 வசூலிக்கப்படும் நிலையில் சென்னையில் ரூ.10 வசூலிக்கப்படுவது முறையல்ல.

குளிரூட்டி வசதி கொண்ட சென்னை மாநகரப் பேருந்துகளில் இதே தொலைவுக்கு 30 ரூபாயும், புறநகர் தொடர்வண்டிகளில் 5 ரூபாயும் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், மெட்ரோ ரயிலில் ரூ.40 வசூலித்தால் இதில் ஏழைகள் பயணம் செய்வது தடுக்கப்பட்டுவிடும்.

மெட்ரோ ரயில் என்பது சேவையாக இருக்க வேண்டுமே தவிர வணிகமாக இருக்கக் கூடாது. இதை உணர்ந்து மெட்ரோ ரயில் கட்டணங்களை டெல்லி மெட்ரோ ரயில் கட்டணங்களுக்கு இணையாகக் குறைக்கும்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x