Published : 03 May 2014 04:55 PM
Last Updated : 03 May 2014 04:55 PM

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை யானை மூக்கு மீன்கள்

பாம்பன் மீனவர் வலையில் அரிய வகை யானை மூக்கு மீன்கள் சிக்கின. இதனை ராமேஸ்வரம் தீவுப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள அரிய மீன் இனங்களில் ஒன்றுக்கு யானையின் தும்பிக்கை போல் மூக்கு காணப்படுகிறது. இந்த மீனின் உயிரியல் பெயர் (Rhinochimaeridae) ஆகும். இதனை யானை மூக்கு மீன் என்று மீனவர்கள் அழைக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை மாலை பாம்பன் தென்கடல் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர். இரவில் வலையை விரித்து காத்திருந்த மீனவர் ஒருவர் வலையில் அரிய வகை யானை மூக்கு மீன்கள் நான்கு சிக்கின. யானையின் தும்பிக்கை போன்ற விநோத மூக்கை உடைய மீனைப் பார்க்க பாம்பன் கடற்பகுதியில் சனிக்கிழமை மக்கள் கூடிவிட்டனர்.

இதுகுறித்து மரைக்காயர் பட்டிணத்தில் உள்ள மத்திய கடல் சார் ஆராய்ச்சியாளர் கூறியதாவது, யானை மூக்கு மீன் (Elephant Nose Fish) என ஆய்வாளர்கள் அழைக்கப்படும் இந்த அரியவகை மீன்கள் பசிபிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடல் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இந்த மீன்கள் சராசரியாக 60 செ.மீ. முதல் 140 செ.மீ. நீளம் வரையிலும் வளரக் கூடியது.

யானையின் மூக்கு போன்ற பகுதி உண்மையில் வாயிலிருந்து உணர்தலுக்காக ஏற்பட்ட ஒரு புடைப்பு ஆகும். இதன் தும்பிக்கை போன்ற அமைப்பை சுய பாதுகாப்பு, தகவல் தொடர்பு, நுகர்தல் போன்றவைக்காகவே இந்த மீனிற்குப் பயன்படுகிறது. மேலும் கண் பார்வை சக்தி குறைவாக கொண்ட இந்த மீன்கள் அதன் தும்பிக்கையை கொண்டு இருண்ட மற்றும் சேர் நிரம்பிய நீரில் செல்லவும், அதன் துணையை கண்டறியவும் உதவுகிறது.

200 மீட்டர் முதல் 2,000 மீட்டர் வரை ஆழமான இடத்தில் இந்த மீன்கள் வாழ்கின்றன. ஆனால் முட்டையிட பெருங்கடலில் இருந்து ஆழமற்ற மன்னார் வளைகுடா பகுதிக்கு வரும் போது மீனவர்களின் வலைகளில் சிக்கி இருக்கின்றன.

இந்த யானை மூக்கு மீனுக்கும், மனிதனுக்குமான மரபணு தொடர்பு மிக நெருக்கமாக உள்ளதால் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புவதால் இம்மீனைப் பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x