Published : 03 Jun 2015 07:46 AM
Last Updated : 03 Jun 2015 07:46 AM

கருத்து சுதந்திரத்தை நிலைநாட்ட நிரந்தர பிரச்சாரம் தேவை: முன்னாள் நீதிபதி கே.சந்துரு வலியுறுத்தல்

கருத்து சுதந்திரத்தை நிலைநாட்ட நிரந்தரமான பிரச்சாரம் தேவை என்று ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கூறினார்.

தொண்டு நிறுவனங்களின் கணக்குகளை மத்திய அரசு முடக்குவது தொடர்பாக கருத்து சுதந்திரத்துக்கான சமூக கூட்டமைப்பு சார்பில் சென்னை எழும்பூர் இக்சா மையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம், பத்திரிகையாளர் ஞாநி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி சந்துரு கூறியதாவது:

பாஜக அரசு அமைந்த ஓராண்டு காலத்தில், கருத்தியல் ரீதியான தாக்குதல் அதிகரித்துள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கோட்பாடுகளை மோடி அரசு நிறைவேற்ற துடிக்கிறது. தொண்டு நிறுவனங்கள் கருத்து கூறக்கூடாது என்று நினைக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து அவர்கள் தவறாக பணம் பெறுவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். ஒரு சில நிறுவனங்கள் அப்படி செய்யலாம். ஆனால், ‘பாஜகவின் நண்பர்கள்’ என்ற பெயரில் இந்தியாவிலேயே பாஜகதான் வெளிநாடுகளில் இருந்து அதிக நிதி பெறுகிறது.

அம்பேத்கருக்கு மணி மண்டபம் கட்டுவோம் என்று சொல்கிற அதே நேரத்தில், ஐஐடியில் பெரியார், அம்பேத்கர் மாணவர் வட்டத்துக்கு தடை விதிக்கிறார்கள். அறிவுஜீவிகள் முக நூலில் (ஃபேஸ்புக்) கருத்து சொல்வதைவிட, கருத்து சுதந்திரத்துக்கு எதிராக ஓன்று சேர்ந்து நிரந்தர பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் பேசும் போது, “நெருக்கடி நேரத்தில் நேரடியா கவே கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இருந்தது. ஆனால் தற்போது மறைமுகமாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் எதை வளர்ச்சி என்கிறதோ அதைத்தான் நாமும் நம்ப வேண்டும் என்கிறார்கள். அதற்கு எதிராக பேசினால், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்கின்றனர்” என்றார்.

பத்திரிகையாளர் ஞாநி பேசுகையில், “தொண்டு நிறுவனம் மாதிரியான சமூக அமைப்புகளுக்கு இளைஞர்கள் அதிகளவில் வரக்கூடும் என்பதால், அவர்களின் முற்போக்கு சிந்தனையை முடக்கவே தங்களின் கொள்கை கோட்பாடுகளை கல்வி நிலையங்களில் புகுத்த நினைக்கிறார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x