Last Updated : 26 Jun, 2015 12:01 PM

 

Published : 26 Jun 2015 12:01 PM
Last Updated : 26 Jun 2015 12:01 PM

ஹெல்மெட் வாங்கப் போறீங்களா?- சரியாக தேர்ந்தெடுக்க சில யோசனைகள்

இருசக்கர வாகனங்களை ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற உத்தரவு வருகிற 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஆனால், எத்தகைய ஹெல்மெட் வாங்க வேண்டும் என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கிறது. இது குறித்து அரசு மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, "தலைக்கு கூடுதல் பாதுகாப்பு தருவதற்குத் தான் ஹெல்மெட். அதை உணர்ந்து தயாரிக்கப்பட்ட ஹெல்மெட்டை, தங்களது தலையின் அளவுக்குப் பொருத்தமாக உள்ளதா? என்பதை அறிந்து வாங்குவது தான் நல்லது.

பெரிதாக இருந்தால், திடீரென இறங்கி கண்களை மறைக்கும் ஆபத்து உண்டு. அவ்வாறு இறங்கிவிடக்கூடாது என்று சமப்படுத்திக் கொண்டே வாகனம் ஓட்டினால், சீக்கிரமே கழுத்துவலி வந்துவிடும். விபத்து நேரத்தில் தனியே கழன்று ஓடிவிடும் ஆபத்தும் உண்டு" என்றார்.

வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவன மேலாளர் பரமேஸ்வரனிடம் கேட்டபோது கூறியது:

பெரும்பாலானவர்கள் ஒரு விலையைச் சொல்லி அதற்குள் ஒரு ஹெல்மெட் தாங்க என்று தான் கேட்கிறார்கள். சிலர் நல்லதா ஒண்ணு குடுங்க என்கிறார்கள். அது உங்கள் உயிரைப் பாதுகாக்காது என்று எல்லோரிடமும் சொல்ல முடிவதில்லை.

உடையாமல் உறுதியாக இருப்பது மட்டும் தான் நல்ல ஹெல்மெட் என்று பொத்தாம் பொதுவாக முடிவெடுக்க முடியாது. மோதினால் அந்த பாதிப்பை குறைக்கும் வகையில் உரிய தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டவை தான் பலன் தரும். எனவே, முடிந்தளவுக்கு நீண்டகாலமாக தயாரிப்பைத் தொடரும் நிறுவனங்களின் ஹெல்மெட்டை தேர்வு செய்வது நல்லது. ஒரிஜினல் நிறுவனத்தின் பெயரைப் போன்றே போலியான பெயருடனும், போலியான ஐஎஸ்ஐ முத்திரையுடனும் ஹெல்மெட்கள் விற்பனையாகின்றன.

விலை எவ்வளவு என்பதை மட்டுமே பிரதானமாக யோசிக்காமல், தங்கள் தலைக்கு அது பொருந்துகிறதா? என்று பார்த்து வாங்க வேண்டும். அதாவது தலையோடு தொடர்பில்லாத அளவுக்குப் பெரிதாக இருப்பதையோ, மிகக் கஷ்டப்பட்டு தலைக்குள் நுழைக்க வேண்டி இருப்பதையோ தேர்வு செய்யக் கூடாது.

ஹெல்மெட்டின் முன்பகுதி கண் புருவத்துக்கு ஒரு அங்குலம் (அதாவது இரண்டு விரல் கனம்) மேலே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கண் களை மறைக்கிற பிளா ஸ்டிக் கண்ணாடியானது, தெளிவாகப் பார்க்கும் வகையிலும், தேவைப்படும்போது மடக்கி விட்டால் நிற்பதாகவும் இருக்க வேண்டும். காவல் துறையினரை ஏமாற்றுகிறோம் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x