Published : 02 Jun 2015 10:53 AM
Last Updated : 02 Jun 2015 10:53 AM

கொட்டாங்கச்சியை கலை பொக்கிஷமாக மாற்றும் கைவினைக் கலைஞர்: ஸ்பூன் முதல் கைத்தடி வரை செய்து அசத்தல்

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் மற்றும் கன்னியாகுமரி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நாகர்கோவிலில் சமீபத்தில் நடைபெற்ற தென்னை தொடர்பான கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது கன்னியாகுமரியை சேர்ந்த ஜெய குரூஸின் (53) அரங்கம்.

சாதாரண கொட்டாங்கச்சியில் பல்வேறு கலைப்பொருட்களை தயாரித்து பார்வையாளர்களை அவர் அசத்தியிருந்தார். கொட்டாங்கச்சியில் தயாரிக்கப்பட்டிருந்த கப், ஹேர் கிளிப், நகைப்பெட்டி, கைத்தடி, நெக்லஸ் என பல பொருட்களை காட்சிக்கு வைத்திருந்தார். கண்காட்சியை காண வந்தவர் களிடம், தனது கலையின் மகத் துவத்தை குறித்து அவர் பேசும்போது, “கொட்டாங்கச்சியை கொண்டே பிளாஸ்டிக்கை ஓரம் கட்டிவிடலாம். பாரம்பரியத்தைக் காப்பாற்றுவதுடன், பிளாஸ்டிக் பயன்பாட்டையும் கட்டுப்படுத்த இந்த கலை கைகொடுக்கும்” என்று விளக்கம் அளித்தார்.

இவர் கடந்த 32 ஆண்டுகளாக கொட்டாங்கச்சியில் கலைப் பொருட்கள் தயாரிப்பதை தனது வாழ்வாதாரமாக கொண்டுள்ளார். சிறந்த கைவினைக் கலைஞர்களுக் கான மாநில விருது, சார்க் உறுப்பு நாடுகள் அளவிலான கண்காட்சியில் சிறந்த படைப்புக்கான கலா  விருது, தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் கலை செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

156 பொருட்கள்

கலைப்பொருள் தயாரிப்பில் தனக்கு எப்படி ஆர்வம் வந்தது என்பது குறித்து நம்மிடம் ஜெய குரூஸ் கூறியதாவது: என்னுடைய தாத்தா சமாதான வில்லவராயரும், அப்பா செபஸ்தியானும் சிறந்த கைவினைக் கலைஞர்கள். அவர்கள் ஆமை ஓடுகளை சேகரித்து, அதில் நகைப்பெட்டி, செயின், நெக்லெஸ் உள்ளிட்ட கலை நுட்பமான பொருட்களை செய்வார்கள். எனது சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு உதவியாக வேலை செய்து வந் தேன். ஆமையை பாதுகாக்கப்பட்ட விலங்காக மத்திய அரசு அறிவித்த பின்பு, எம்பிராய்டரி வேலைகளில் அப்பா ஈடுபட்டார். என்னுடைய அம்மா ராஜாத்தியும் நன்றாக ஓவி யம் வரையும் ஆற்றல் பெற்றவர்.

நான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால், அதோடு படிப்பை நிறுத்திவிட்டேன். அப்போதுதான் வீட்டு புழக்கடையில் கிடந்த கொட்டாங்கச்சியை எடுத்து ஆமை ஓட்டில் அப்பா செய்யும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹேர் கிளிப் செய்து பார்த்தேன்.

இயல்பாகவே அழகாக வந்தது. தொடர்ந்து மத்திய ஜவுளித் துறையின் அகில இந்திய கைத்தொழில் உற்பத்தி மற்றும் விற்பனை விரிவாக்க மையத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டேன். பாரம்பரியமாக மூதாதையர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட விஷயத்தை கொட்டாங்கச்சியை பயன்படுத்தி செய்ததற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது கொட்டாங்கச்சியில் இருந்து ஸ்பூன், கப், செயின், நெக்லெஸ், பேனா, வாட்ச், முதியவர்கள் பயன்படுத்தும் கைத்தடி உள்ளிட்ட 156 பொருட்களை செய்து வருகி றேன். இதன் மூலம் 8 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளேன். பாரம்பரியம், நவீனத்துவம் ஆகிய இரண்டையும் கலந்து மேற்கொள் ளப்படும் கைவினைப் பொருட் களுக்கு ஜெர்மன், பிரிட்டன், ஆஸ்தி ரேலியா உள்ளிட்ட நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.

அந்நாடுகளிலிருந்து மாதந் தோறும் 20 ஆயிரம் பொருட்களை தயாரித்து அளிக்குமாறு கேட்கின் றனர். ஆனால் உற்பத்தித்திறன் குறைவாக இருப்பதனால் என் னால் அனுப்ப முடியவில்லை.

கொட்டாங்கச்சி கலைப்பொருட் கள் 80 ஆண்டுகளுக்கு சேதமடை யாது. கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைகளில் உள்ள தென் னைகளின் கொட்டாங்கச்சிகள் கைவினைப் பொருட்கள் செய்ய ஏற்றதாக உள்ளன. எனது பணிக்கு மனைவி ஜான்சி உள்ளிட்ட குடும் பத்தினர் உறுதுணையாக இருக் கின்றனர் என்று ஜெயகுரூஸ் கூறினார்.

கொட்டாங்கச்சி பலருக்கும் தூக்கி வீசப்படும் கழிவுப் பொருள். ஆனால், அந்த கழிவுப் பொருளையே தன் வாழ்வின் மூலதனமாய் மாற்றி சாதித்துள்ளார் ஜெயகுரூஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x