Published : 01 Jun 2015 07:12 PM
Last Updated : 01 Jun 2015 07:12 PM

உயர் அழுத்த மின் பாதை அமைக்க விளைநிலங்களை பறிக்கக் கூடாது: ராமதாஸ்

உயர் அழுத்த மின் பாதை அமைக்க விளைநிலங்களை பறிக்கக் கூடாது. விவசாயிகளுக்கு எதிரான இத்திட்டத்தைக் கைவிட்டு அண்ணா பல்கலைக்கழகம் வகுத்துத் தந்த வழித்தடத்தில் மின்பாதையை அமைக்க ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தனியார் நிறுவனங்களுக்காக விவசாயிகளின் விளைநிலங்களை பறிக்கும் நோக்குடன் நிலம் எடுத்தல் சட்டத்தில் திருத்தம் செய்யும் நோக்குடன் மத்திய அரசு 3 ஆவது முறையாக பிறப்பித்துள்ள அவசர சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் ஒரு பைசா இழப்பீடின்றி 834 குடும்பங்களின் நிலங்களை பறிக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள், சிறுசேரியில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட 78 நிறுவனங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் கலிவந்தப்பட்டு சிற்றூர் முதல் சோழிங்கநல்லூர் ஒட்டியம்பாக்கம் வரை 24கி.மீ. தொலைவுக்கு 440 கிலோ வோல்ட் அழுத்தம் கொண்ட மின்பாதையை தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் அமைத்து வருகிறது.

இதற்காக காயார், வெம்பேடு ஆகிய பகுதிகளில் 21 உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைப்பதற்காக 150 ஏக்கர் நிலத்தை மின்தொடரமைப்புக் கழகம் தேர்ந்தெடுத்துள்ளது. மொத்தம் 834 குடும்பங்களுக்கு சொந்தமான இந்த நிலங்களில் மின் கோபுரங்களை அமைப்பதற்காக அவர்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படாது என்று மின்தொடரமைப்புக் கழகம் அறிவித்துள்ளது.

இந்த மின் கோபுரங்களை அமைப்பதற்காக அப்பகுதியில் வளர்க்கப்பட்டுள்ள தென்னை, பூவரசு, தாந்திரிகா, அத்தி வகைகளைச் சேர்ந்த 1557 மரங்களையும், 1.64 லட்சம் சவுக்கு மரங்களையும் வெட்டி வீழ்த்தியாக வேண்டும்.

மேலும், 72.75 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெல், ராகி, சோளம், காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் நாசப்படுத்தப்படும். இவை அனைத்தும் பணப்பயிர்கள் என்பதால் இவற்றுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படாது. மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுவிட்டால் மின்பாதைக்கு இருபுறமும் தலா 33.5 மீட்டர் வீதம் மொத்தம் 67 மீட்டர் அகலத்துக்கு விவசாயம் செய்ய முடியாது என்பதால் 150 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது.

விளைநிலங்களின் விலை தற்போதைய மதிப்பில் 10 விழுக்காடாக குறைந்து விடும். இதனால் அந்த நிலங்களை நம்பியுள்ள 834 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாட நேரிடும். இந்த உண்மைகளை விளக்கினாலும் அதையேற்று இத்திட்டத்தைக் கைவிட மின்தொடரமைப்புக் கழகம் மறுத்து விட்டது.

மென்பொருள் நிறுவனங்களுக்கும், பிற நிறுவனங்களுக்கும் மின்சாரம் கொண்டு செல்வதற்காக இத்தகைய பாதைகளை அமைப்பது தவிர்க்க முடியாதது தான். அதேநேரத்தில் இத்தகைய திட்டத்தால் மற்றவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் தற்போது அமைக்கவுள்ள மின் பாதையின் வழித்தடம் கூடுதல் செலவு பிடிப்பது என்பது மட்டுமின்றி மக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதுமாகும்.

கலிவந்தப்பட்டு கிராமத்திலிருந்து ஒட்டியம்பாக்கத்திற்கு 18 கி.மீ. நீளத்தில் இப்பாதையை அமைக்கலாம் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத் தொலையுணர்வுத் துறை திட்டம் வகுத்துள்ளது. இப்பாதையில் உள்ளவை பெரும்பாலும் தரிசு நிலம் மற்றும் நீர்நிலைகள் என்பதால் இவ்வழியில் மின்பாதை அமைத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆனால், இவ்வழியில் மின்பாதையை அமைக்காமல் கலிவந்தப்பட்டுவிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள காயார், வெம்பேடு வழியாக 24 கி.மீ. தொலைவுக்குச் சுற்றிக் கொண்டு செல்லும் வகையில் பாதை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் விளைநிலங்கள் அதிகமாக இருப்பதால் வாழ்வாதாரம் பறிக்கப்படும் என்பதை கூட அக்கழகம் கருத்தில் கொள்ளவில்லை.

அதுமட்டுமின்றி, இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல்வேறு விதிமீறல்களும் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி பெறப்படவில்லை. இத்திட்டத்தை எதிர்த்து காயார் கிராம மக்கள் சார்பில் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், இப்பாதை அமையவுள்ள பகுதிகள் தரிசு நிலங்கள் என்றும், இப்பகுதியில் 98 பனை மரம், 12 வேப்பமரம், 11 ஏக்கரில் சவுக்குமரம் ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று வருவாய்த்துறை உதவியுடன் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து சாதகமானத் தீர்ப்பை மின்தொடரமைப்புக் கழகம் பெற்றுள்ளது. இதனால் தங்களின் நிலங்கள் எப்போது பறிபோகுமோ? என்ற அச்சத்தில் மக்கள் உறைந்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம் வகுத்துத் தந்த வழித்தடத்தில் மின்பாதை அமைக்கப்பட்டால் திட்ட செலவில் ரூ.7.8 கோடி குறையும். ஆனால், அதைவிடுத்து விளைநிலங்கள் அமைந்துள்ள வழித்தடத்தில் மின்பாதை அமைக்க மின்தொடரமைப்புக் கழகம் துடிப்பதற்குக் காரணம் விவசாயிகளை மிரட்டி பணம் பறிக்கலாம் என்பது தான்.

இந்த வழித்தடத்தில் தமிழ் திரைப்பட நடிகை ஒருவருக்கு சொந்தமாக 80 ஏக்கர் நிலம் உள்ளது. அந்நிலம் வழியாகத் தான் இந்த மின்பாதை அமைக்கப்படவிருந்தது. ஆனால், அந்த நடிகை மேலிடத்திற்கு பல கோடி பணம் கொடுத்ததால், அவரது நிலத்திற்கு பாதிப்பில்லாத வகையில் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நில வணிக அதிபர் ஒருவரிடமிருந்து ரூ.12.00 கோடி பெற்றுக்கொண்டு அவரது நிலத்தில் இப்பாதை அமையாதவாறு அதிகாரிகள் பார்த்துக் கொண்டனர். காயார், வெம்பேடு பகுதி மக்களையும் அதிகாரிகள் போர்வையில் சந்திக்கும் சில தரகர்கள் மின்துறை அமைச்சரை சந்தித்து அவரது விருப்பத்தை நிறைவேற்றினால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் திட்டத்தை மாற்றி அமைத்து விடலாம் என்று பேரம் பேசியுள்ளனர்.

வேளாண் விளைநிலங்களை ஆக்கிரமித்து மின்பாதை கோபுரங்களை அமைப்பதும், அதை தவிர்க்க அமைச்சருக்கு லஞ்சம் தரும்படி மிரட்டுவதும் கண்டிக்கத்தக்கவை. ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் வழியாக எரிவாயு குழாய்ப் பாதை அமைக்க எந்த அடிப்படையில் ஜெயலலிதா உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்ப்பு தெரிவித்ததோ, அதே காரணங்கள் இதற்கும் பொருந்தும். குழாய்ப் பாதையை கண்டித்த தமிழக முதல்வர், இப்போது விளைநிலங்கள் வழியாக மின்பாதை அமைக்கவும், அந்த நிலங்களின் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ஆதரிப்பது ஏன்? எனத் தெரியவில்லை.

விவசாயிகளுக்கு எதிரான இத்திட்டத்தை கைவிட்டு, அண்ணா பல்கலைக்கழகம் வகுத்துத் தந்த வழித்தடத்தில் மின்பாதையை அமைக்க ஆணையிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக நடத்தும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x