Last Updated : 12 Jun, 2015 08:54 AM

 

Published : 12 Jun 2015 08:54 AM
Last Updated : 12 Jun 2015 08:54 AM

குடிநீர் வாரியத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.963 கோடியை தாண்டியது

தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ. 923 கோடியைத் தாண்டியுள்ளது. அதை தமிழக அரசு மானியமாக வழங்க வேண்டும் என்று குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு நிலவரப்படி, உள்ளாட்சி நிறுவனங்கள், வாரியத்துக்கு வழங்க வேண்டிய குடிநீர் கட்டணமே ரூ. 322 கோடி நிலுவையில் உள்ளது.

கோவைக்கு முதலிடம்

அதிக நிலுவைத் தொகை வைத்துள்ள மாநகராட்சிகள் பட்டியலில் கோவை முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி, பில்லூர், சிறுவாணி திட்டங்களுக்காக அது குடிநீர் வாரியத்துக்கு வழங்க வேண்டிய கட்டண பாக்கி ரூ. 159 கோடி ஆகும். இதேபோல, சேலம் மாநகராட்சி ரூ. 27 கோடியும், திருப்பூர் மாநகராட்சி ரூ. 1 கோடியும் பாக்கி வைத்துள்ளன.

நகராட்சிகளைப் பொருத் தவரை கூடலூர் நகராட்சி ரூ. 1 கோடி பாக்கி வைத்துள்ளது. கிராம ஊராட்சிகளுக்கான கட்டண பாக்கியில் சேலம் மாவட்டம் முதலிடத்திலும், ஈரோடு, கோவை மாவட்டங்கள் அதற்கடுத்த இடங்களிலும் உள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சம்மேளன ஏஐடியுசி மாநில துணைத் தலைவர் கே.கே.என். ராஜன் மதுரையில் நேற்று கூறியதாவது:

உள்ளாட்சி அமைப்புகள் வைத்துள்ள பாக்கி உள்ளிட்ட காரணங்களால் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான ஒட்டுமொத்த பற்றாக்குறை ரூ. 963 கோடியாகிவிட்டது. 2009-10 ஆண்டில் 48 சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறை இப்போது 60 சதவீதத்தை எட்டிவிட்டது. இதுகுறித்து பொதுத் துறை நிறுவனங்களுக்கான நிதித் துறை நடத்திய ஆய்வில், 2011-12 ஆண்டில் ரூ. 652 கோடியாக இருந்த பணியாளர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களுக்கான செலவு இப்போது ரூ. 725 கோடியாக அதிகரித்துவிட்டது என்றும், மேலும் இது அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே, அரசு உடனடியாகத் தலையிட்டு பற்றாக்குறை ரூ. 963 கோடியை குடிநீர் வாரியத்துக்கு மானியமாக வழங்க வேண்டும். ஏற்கெனவே பல்வேறு வகையான நிதிச் சுமைகளால் தடுமாறி வரும் உள்ளாட்சி நிர்வாகங்களிடம் குடிநீர் திட்டங்களை ஒப்படைப்பதைக் கைவிட வேண்டும். குடிநீர் வழங்கலுக்கென மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதி போதுமானதாக இல்லை. எனவே, நீராதாரம், நிதி ஆதாரம் போன்றவற்றை உறுதிப்படுத்தாமல் புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது.

குடிநீர் வழங்கலுக்கென தனித் துறையை உருவாக்கி, முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டத்தை செயல்படுத்துவது ஒருவர், பராமரிப்பது மற்றொருவர், குடிநீர் கட்டணம் வசூலிப்பது இன்னொருவர் போன்ற நிலையை மாற்றி, அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைந்து குடிநீர் வாரியமே செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்றார்.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பொதுத் துறை நிறுவனங்களுக்கான நிதிப் பிரிவு கொடுத்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், நிதிப் பற்றாக்குறையை போக்குவ தற்கான பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இதுதொடர்பாக எங்களது மேலாண்மை இயக்குநர் 19.9.13 அன்றே அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு மேல் தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x