Published : 03 May 2014 01:47 PM
Last Updated : 03 May 2014 01:52 PM
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையை 'சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது' என விமர்சித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் என்றால் வரையறை கடந்து பேசலாமா என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது பற்றியும், அதில் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தது குறித்தும், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவது பற்றியும் நான் மாத்திரமல்ல; தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அறிக்கை விடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம் விட்டு விட்டு என்னை மட்டும் கடுமையாகத் தாக்கி முதல் அமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டில் சயனித்தவாறே அறிக்கை விடுத்திருக்கிறார்.
அந்த அறிக்கையில் 1998ஆம் ஆண்டு கோவையில் தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை ஒப்பிட்டிருக்கிறார். எனவே 1998ஆம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு நடைபெற்ற போது, முதலமைச்சர் என்ற முறையில், நான் எப்படி நடந்து கொண்டேன் என்பதைத் தெளிவாக்கிட விரும்புகிறேன்.
14-2-1998 அன்று அதாவது தமிழகத்தில் 16ஆம் தேதியன்று தேர்தல் நடக்கவிருந்த நேரத்தில் கோவையில் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றவுடன், உடனடியாக நான் அன்றைய பிரதமர் ஐ.கே. குஜ்ராலுடன் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். மறுநாள், 15-2-1998 அன்றே நான் விபத்து நடைபெற்ற கோவை மாநகருக்கு விரைந்தேன்.
கோவை சென்ற நான் குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களையெல்லாம் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
அந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதமும் காயமுற்றவர்களுக்கு, அவர்களின் காயத்தைப் பொறுத்தும் நிதி உதவி அளிக்கச் செய்தேன்.
விபத்து நடந்த அதே நாளில் புதுக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, “கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்” என்று கோரினார்.
மணப்பாறையில் ஜெயலலிதா பேசும்போது, “தி.மு.கழக ஆட்சியில் என்னுடைய பாதுகாப்புக்குக் கூட உத்தரவாதமில்லை” என்றார். மானாமதுரையில் பேசும்போது, “குண்டு வெடிப்புச் சம்பவங்களை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை, இதைச் செய்ய முடியாத இவர் இன்னும் பதவியில் இருக்கவேண்டுமா?” என்று கேட்டார்.
1998ஆம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு நடைபெற்ற போது இப்படியெல்லாம் பேசியவர் தான் ஜெயலலிதா. தற்போது நான் அப்படியெல்லாம் கூடப் பேசவில்லை.
என்னுடைய அறிக்கையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதியை உடனடியாக முறைப்படி முழுமையாக விசாரித்திருந்தால், இந்தக் குண்டு வெடிப்புத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லவா; எனவே காவல் துறை நுண்ணறிவுப் பிரிவின் ஆலோசனையுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன். இதைத் தான் தவறு என்று கூறி முதல் அமைச்சர் கொடநாட்டில் அவர் தங்கியிருக்கும் ஓய்வு மாளிகையிலிருந்து அவசர அவசரமாக அறிக்கை விட்டிருக்கிறார்.
நான் வெளியிட்ட அதே அறிக்கையில், தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி, குடிநீர்த் தட்டுப்பாடு, தாய்மார்கள் காலிக் குடங்களோடு நடத்திடும் மறியல் போராட்டங்கள், கடுமையான மின்வெட்டு, ஆம்னி பேருந்துகளில் கடுமையான கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை, காடீநுந்து போன நெற்பயிர்கள் என்பதைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டு இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டிய முதல் அமைச்சர் எங்கே என்று கேட்டிருந்தேனே; முதலமைச்சர் ஜெயலலிதா வசதியாக இவற்றையெல்லாம் மறந்து விட்டாரே? ஏன்?
நான் வெளியிட்ட அறிக்கையை சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்று ஜெயலலிதா விமர்சிக்கிறார் என்றால், 98ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் குண்டு வெடிப்புக்காக என்னை பதவி விலக வேண்டுமென்று கூறினாரே,அவர் சொன்னது மட்டும் சாத்தான் வேதம் ஓதியதைப் போல இல்லையா? முதலமைச்சர் என்றால் வரையறை கடந்து எதை வேண்டுமென்றாலும் பேசலாமா?
கோவை குண்டு வெடிப்பு பற்றி அறிக்கை விட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போது தலைநகரிலேயே குண்டு வெடிப்பு நடைபெற்றிருக்கிறதே, என்ன செய்து கொண்டிருக்கிறார்? கோவை குண்டு வெடிப்பு நடைபெற்றவுடன், முதலமைச்சராக இருந்த நான் கோவை சென்று மருத்துவமனையிலே சிகிச்சை பெறுபவர்களையெல்லாம் நேரில் கண்டு ஆறுதல் கூறினேனே, அவ்வாறு முதல் அமைச்சர் ஜெயலலிதா உடனடியாக சென்னை வந்து பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் கூறியிருக்க வேண்டாமா?
நான் ஏதோ சாய்வு நாற்காலியில் சுகமாக அமர்ந்தவாறே, எதையும் தெரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில் கருத்துகளைக் கூறுவதாக தனது அறிக்கையிலே ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதும் சாலை வழியாகவே வேனிலே சென்று மக்களையெல்லாம் நேரில் சந்தித்து வந்த நான் சுகவாசியாம்! சொல்வது யார் தெரியுமா?
ஒவ்வொரு ஊரிலும் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து கெலிகாப்டர் தளம் அமைத்து, முதலமைச்சர் ஜெயலலிதா விமானத்திலும், கெலிகாப்டரிலும் பயணம் செய்து, வேட்பாளர்களை வாக்கு கேட்கக் கூட அனுமதிக்காமல் பிரச்சாரம் செய்து விட்டு, இரண்டு மாத காலம் தலைமைச் செயலகத்திற்கே செல்லாமல் இருந்து, நிர்வாகப் பணிகளை அலட்சியப்படுத்திவிட்டு, நேராக கொடநாட்டில் போய் தங்கிக் கொண்டு என்னை சுகவாசி என்று சொல்வது முறை தானா என்பதைத் தமிழ்நநாட்டு மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்". இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.