Last Updated : 04 Jun, 2015 08:29 AM

 

Published : 04 Jun 2015 08:29 AM
Last Updated : 04 Jun 2015 08:29 AM

தேர்தலில் வாக்குகளைக் கவர சல்லிக் காசு தராமல் தனித்தே போட்டியிடத் தயாரா?- அதிமுக, திமுகவுக்கு மருத்துவர் ராமதாஸ் கேள்வி

தேர்தலில் வாக்குகளைக் கவர அதிமுக மற்றும் திமுக கட்சிகள் சல்லிக் காசு கூட தராமல் போட்டியிடத் தயாரா என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார். ‘தி இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் இவ்வாறு கேள்வி எழுப்பினார். மேலும் தொடர்ந்து அவர் கூறியதாவது:

பேஸ்புக், ட்விட்டரில் கணக்கு தொடங்கியுள்ளீர்கள். அதில் வரும் கருத்து தாக்குதல்களுக்கு பொறுமை யாக பதில் சொல்லத் தயாராக இருக்கிறீர்களா?

கட்டாயமாக. 30 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் அதற்கான பக்குவத்தை பெற்றிருக்கிறேன்.

வட மாவட்டங்களில் பூத் கமிட்டியே அமைத்துவிட்டீர்கள். ஆனால் தென் மாவட்டத்தில் தேர்தல் ஆயத்தப் பணிகளே தொடங்கவில்லையே?

இந்த வேலையைச் செய்வதற் காகத்தான் மதுரையில் 2 நாட்கள் முகாமிட்டிருந்தேன். அடுத்ததாக எங்கள் முதல்வர் வேட்பாளர் அன்பு மணி மதுரைக்கும், நெல்லைக்கும் வர இருக்கிறார். இது தெற்கே அர சியல் சூறாவளியை ஏற்படுத்தும்.

130 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைப்போம் என்கிறீர்கள். எண்ணிக்கை குறைந்தால் திராவிட, தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பீர்களா?

130 தொகுதிக்கும் மேல் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறோம். இருந்தாலும், தேர்தல் முடிவைப் பொறுத்து முடிவு எடுப்போம். கூட்டணி ஆட்சி அமைத்து, எங்களோடு சேரும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தரவும் தயாராக உள்ளோம். ஆனால், மறுபடியும் சொல்கிறேன் திமுக, அதிமுகவுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ள மாட்டோம்.

ஜெயலலிதாவை அரசியல் களத்தில் எதிர்கொள்ள முடியாமல்தான், அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய தமிழக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

ஜெயலலிதா ஒன்றும் அசைக்க முடியாத சக்தி கிடையாது எம்ஜிஆரைப் போல. ஜெயலலிதா தொடர்ந்து முதல்வராக இருந்ததும் கிடையாது. பலமுறை தோற்றிருக்கிறார். 1996 தேர்தலில் பர்கூர் தொகுதியில் சுகவனத்திடம் தோற்றுப் போனவர்தானே அவர்.

ஆட்சிக் கனவுடன் எதிர்க்கட்சிகள் பிரிந்து நிற்பது, அதிமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவி செய்வதாகிவிடாதா?

தனித்தனி அணியாக அல்ல, தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் எல்லாமே தனித்து போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபிக்க வேண் டும். கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் இதைத்தான் வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் வாக்காளர் களுக்குப் பணம் தராமல் தனித்துப் போட்டியிட தயார். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு நான் இரண்டு சவால்களை விடுக்கிறேன். நீங்கள் தனித்துப் போட்டியிடத் தயாரா? ஓட்டுக்காக சல்லிக் காசு கூட தராமல் போட்டியிடத் தயாரா?

அப்படி தனித் தனியாக போட்டியிட் டால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளதே?

எங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்று நம்புகிறோம். இல்லை என்றால் திமுக, அதிமுக தவிர்த்து மற்ற கட்சிகளை வைத்து கூட்டணி ஆட்சி அமைப்போம்.

அதிமுக, பாஜக கூட்டணி அமையும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறதே. அப்படி அமைந்தால்?

அதுபோன்ற செய்திகள்தான் அதிகம் உலா வருகிறது. அப்படி போட்டியிட்டாலும் கூட அதிமுக தோல்வியைத்தான் தழுவும்.

‘தாமரைச்செல்வனை திமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவித் தால், அவரது கேள்விக்கு எங்கள் முதல்வர் வேட்பாளர் அன்புமணி பதில் சொல்வார்’ என்று கூறியிருக் கிறீர்கள். ‘ராமதாஸ் முதல்வர் வேட் பாளர் கிடையாது, எனவே அவருக்கு நாங்கள் பதில் தர வேண்டியதில்லை’ என்று உங்கள் பாணியிலேயே மற்ற கட்சிகள் சொன்னால் ஏற்பீர்களா?

அதுவேறு இதுவேறு. அன்புமணி, ஸ்டாலினுக்குத்தான் கடிதம் எழுதினார். தாமரைச் செல்வனுக்கு எழுதவில்லை. எனவே, அது பகிரங்கக் கடிதமாக இருந்தாலும் கூட ஸ்டாலின்தான் பதில் தர வேண்டும். பதில் தர வேண்டிய அவர், தகுதியில்லாதவர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்றார். என்னுடைய தகுதிகள் இதோ என்று அன்புமணி வெளியிட்ட பட்டியலுக்கு ஸ்டாலி னிடம் இருந்து பதில் இல்லை. இப்போதும் கேட்கிறேன். முதல் அமைச்சர் ஆக ஆசைப்படுகிற தமிழக தலைவர்களில் யாருக் காவது அன்புமணிக்கு உள்ள அளவுக்கு தகுதி இருக்கிறதா?

காமராஜர், கக்கனும் கூட பெரிய படிப்பு படித்தவர்கள் இல்லையே?

நான் சொல்கிற தகுதி, கல்வித் தகுதி அல்ல; செயல்பாடுகளின் அடிப்படையிலான தகுதி.

2016 தேர்தலில் ‘நாம்தமிழர்’ கட்சி போட்டியிடும். 2021-ல் ஆட்சியைப் பிடிப்போம் என்கிறாரே சீமான்?

(சிரிக்கிறார்). யார் வேண்டு மானாலும் அப்படிச் சொல்லிக் கொள்ளலாம். அது அவர்களின் உரிமை. அதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

‘வன்னியர் ஆட்சி அமைப்போம்’ என்ற உங்கள் பழைய முழக்கம், மற்ற சமூகத்தவர்களின் வாக்குகள் பாமகவுக்கு வராதபடி செய்துவிட் டது. இனியாவது தலித் தலைவர்கள் உள்ளிட்டவர்களுடன் இறங்கி வந்து பேசுவீர்களா?

இந்தக் கேள்வி இப்போது வேண்டாம் என்று நினைக் கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x