Published : 27 Jun 2015 10:15 AM
Last Updated : 27 Jun 2015 10:15 AM

கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை 29-ம் தேதி தொடக்கம்? - ரயில் நிலையங்களில் இறுதிகட்ட பணிகள் தீவிரம்

கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை வரும் 29-ம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் இரண்டாவது பாதையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 13 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் களை இயக்க பாதுகாப்பு ஆணையரகமும் அனுமதி அளித்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரண மாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆர்.கே.நகரில் இன்று தேர்தல் நடக்கவுள்ளதால் அடுத்த சில நாட்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில் கோயம்பேடு, சிஎம்டிஏ, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 ரயில் நிலையங்களில் இறுதிகட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலையங்களில் வண்ணம் பூசுதல், டிக்கெட் கவுன்ட்டர் திறப்பதற்கான ஏற்பாடு, எஸ்கலேட்டர்களில் ஆய்வு நடத்துதல், ரயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள், பார்க்கிங் வசதிகளுக்கு ஏற்பாடு உள்ளிட்ட பணிகள் நேற்று நடைபெற்றன. கோயம்பேட்டில் தொடக்க விழா நடக்கவுள்ளதால், சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தல் மற்றும் தூய்மைப்படுத்தல் பணிகள் நடக்கின்றன.

மெட்ரோ ரயில் சேவை 29-ம் தேதி தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘கோயம்பேடு ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

இதற்காக மெட்ரோ ரயில்வே யின் உயர் அதிகாரிகள் தலைமை செயலகத்துக்கு சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்தவுடன் மெட்ரோ ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளது. இருப்பினும், தமிழக அரசு இதுவரையில் அதிகாரப்பூர்வமாக தொடக்க விழாவுக்கான தேதியை அறிவிக்கவில்லை. ஆனால், ரயில் நிலையங்களில் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x