Published : 23 Jun 2015 05:33 PM
Last Updated : 23 Jun 2015 05:33 PM

விளையாட்டில் சாதித்தால் ரயில்வேயில் வேலைவாய்ப்பு: மத்திய மண்டல ஐ.ஜி. கருத்து

மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் பெறும் வீரர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன என திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ராமசுப்பிரமணியம் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டிகள், கடந்த இரு நாள்களாக நடைபெற்றன. மதுரை, கரூர், காஞ்சிபுரம், திருச்சி, சென்னை உட்பட 10 அணிகள் விளையாடின.

இறுதிப் போட்டியில் திருச்சி காவல்துறை அணியும், காஞ்சிபுரம் மாவட்ட அணியும் மோதின. இதில் திருச்சி அணி வெற்றிபெற்றது. அந்த அணிக்கு நினைவுக் கோப்பை, ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 2-ம் இடம் பெற்ற காஞ்சிபுரம் அணிக்கு நினைவுக் கோப்பை, ரூ. 7 ஆயிரம், 3-ம் இடம்பெற்ற திண்டுக்கல் அணிக்கு நினைவுக் கோப்பை, ரூ. 5 ஆயிரம், 4-ம் இடம்பெற்ற மதுரை அணிக்கு நினைவுக் கோப்பை ரூ. 3 ஆயிரம் வழங்கப்பட்டது. தெற்கு ஆசிய கைப்பந்து கழகத் தலைவரும், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யுமான ராமசுப்பிரமணியம் பரிசுகளை வழங்கிப் பேசும்போது, உலக நாடுகள் அனைத்தும் கைப்பந்து விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால் கைப்பந்து போட்டிக்கு உலகளவில் மவுசு ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் தற்போது கைப்பந்து போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

மாநிலப் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை பெறும் வீரர்களுக்கு இந்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்றார்.

மாநில கைப்பந்து கழக துணைத்தலைவர் கே. ரத்தினம், மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சரவணன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், பொருளாளர் சந்திரசேகர், துணைச் செயலாளர்கள் ராஜசேகர், மகாதேவன், சேரன் பள்ளி முதல்வர் என். திலகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x