Published : 08 Jun 2015 06:00 PM
Last Updated : 08 Jun 2015 06:00 PM

வெற்றித் தத்துவம் ஒருபோதும் தோற்காது: இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் நம்பிக்கை

வெற்றித்தத்துவம் ஒருபோதும் தோற்காது; நான் புரிந்தவரை மார்க்சியமே உலகின் சிறந்த தத்துவம் என கோவையில் நடைபெற்ற விழாவில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தெரிவித்தார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், கோவை சாரதா திரையரங்கில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியான புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற திரைப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிடல் நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தமுஎகச சார்பில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கோவை மாவட்ட செயலாளர் மு.ஆனந்தன் தலைமை வகித்தார்.

விழாவில், எஸ்.பி.ஜனநாதன் பேசியதாவது: ஒரு திரைப்படம் எடுக்கும்போது ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. திரைப்படம் தயாரிப்பு கடுமையாக உள்ளது. இந்த படத்தை எடுப்பதற்கான பணத்தை முழுமையாக தயாரிப்பாளரிடம் இருந்து பெற்றுக் கொண்டேன். தயாரிப்புச் செலவுக்கான முழு பணத்தையும் பெற்றபின், படத்தை முழுமையாக எடுத்துக் கொடுப்பேன்.

அப்படியான ஒரு ஒப்பந்தம் மூலமே இந்த படத்தை முழுமையாக எடுக்க முடிந்தது. இது போன்ற கருத்துகளை சொன்னால் படத்தை வெளியிட முடியாது. வெற்றி பெறாது என்று சொன்னார்கள். பேராண்மை படம் தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் வெற்றி பெற்றது. அந்த படத்தில் ஒரு காட்சியில் ஜெயம் ரவி ஒரு பாறையின் மீது ஏறி பொதுவுடைமை அரசியலைவிட சிறந்த அரசியல் ஏதுமில்லை என்று சொல்வார். அது நான் விரும்பி வைத்த காட்சி.

அந்த படம், உலகம் முழுவதும் பெரும் வெற்றியை கொடுத்தது. அந்த படத்தை பெற்ற ஒரு விநியோகஸ்தர்தான் இப்போது, புறம்போக்கு படத்தை தென்னிந்தியா முழுவதும் விநியோகம் செய்யவதற்கான உரிமையை உடனடியாக வாங்கிக் கொண்டார்.

வர்க்க முரண்பாடுகள் கனக்கில் எடுத்துக்கொள்ளாத எந்த தேசிய இன விடுதலை போராட்டமும் முழுமையாக வெற்றி பெறாது என்ற வசனம் படத்தில் இடம் பெறுகிறது. இது குறித்து கேள்விகள் என் முன்னே வைக்கப்பட்டன. அதில், தேசிய இனமுரண்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாத எந்த வர்க்க புரட்சியும் வெற்றிபெறுமா எனக் கேட்டார்கள்.

வர்க்க முரண்பாடுகளை கணக்கில் எடுக்காமல் சாதிய பிரச்சினைகளைக்கூட தீர்க்க முடியாது. வர்க்க முரண்பாடே அனைத்துக்கும் அடிப்படையான முரண்பாடு என்பது எனது தனிப்பட்ட கருத்து. நான் புரிந்தவரை மார்க்சியம் மட்டுமே உலகில் சிறந்த தத்துவம். அதை சொல்வதற்கு இந்த சினிமாவை பயன்படுத்துகிறேன்.

நான் தேர்ந்தெடுத்த திரைப்படத் துறை மக்களோடு தொடர்பு கொள்ளும் சாதனமாக உள்ளது. வெற்றிபெரும் தத்துவத்தை திரைப்படம் மூலமாக பயன்படுத்துகிறேன். அதில் சில நிறைகளும், குறைகளும் இருக்கும். இது எனது முயற்சி.

எனக்கு பிறகு வரும் இளைஞர்கள் அந்த குறைகளை பூர்த்தி செய்து, சிறந்த படங்கள் எடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. எனது படத்துக்கு ஒத்துழைத்த நடிகர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது அடுத்த படமும் இது போன்ற படமாக எடுக்க முயற்சிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு, பஞ்சாலை தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தில் பங்கேற்று ஆங்கிலேயே அரசால் தூக்கில் இடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகளின் படத்தை நினைவுப்பரிசாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வழங்கினார். சின்னியம்பாளையம் தியாகிகளின் வரலாற்று குறித்து எடுத்துரைக்கும் சங்கமம் என்ற நாவலை சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன் வழங்கினார்.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் உதவி இயக்குநர்கள் ரோகந்த், முரளி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

‘காதலை மையமாக வைத்து அடுத்த திரைப்படத்தை எடுக்கப் போகிறேன்’ என்று எஸ்.பி.ஜனநாதன் ‘தி இந்து’ நிருபரிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x