Published : 23 Jun 2015 07:10 AM
Last Updated : 23 Jun 2015 07:10 AM

சென்னை கண்காட்சியில் துணிகரம்: வைர வியாபாரியிடம் ரூ.38 கோடி நகைகளை பறிக்க முயன்ற வெளிநாட்டு கொள்ளையர்கள் - கொலம்பியா நாட்டு இளைஞர் சிக்கினார்; மற்றொருவர் தப்பியோட்டம்

நட்சத்திர ஹோட்டலில் நடந்த நகைக் கண்காட்சியில் வைர வியாபாரியிடம்இருந்து ரூ.38 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடிக்க முயன்ற கொலம்பியா நாட்டு இளைஞர் சிக்கினார். தப்பிச் சென்ற மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை அண்ணா சாலை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கடந்த 19-ம் தேதி முதல் சர்வதேச நகை கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வந்தது. இதில் ஏராளமான வெளிநாட்டு வியாபாரிகள் கலந்துகொண்டு தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகளை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வைர வியாபாரி வினோத் என்பவரும் கண்காட்சியில் பங்கேற்றார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கண்காட்சி முடிந்ததும் மீதமிருந்த ரூ.38 கோடி மதிப்புள்ள நகைகளை ஒரு பெட்டியில் எடுத்துக்கொண்டு இரவு 10 மணியளவில் ஹோட்டலின் கார் பார்க்கிங் பகுதிக்கு வந்தார் வினோத். அப்போது கொலம்பியா நாட்டைச் சேர்ந்த ஜோஸ் ஓஸம்பெர்க் என்ற ஒசாரியோ (36), ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜிம்மி ஆகிய இருவரும் வினோத்துடன் பேசிக்கொண்டே கார் பார்க்கிங் பகுதிக்கு வந்தனர். வினோத் நகைப் பெட்டியை காரின் சீட்டில் வைத்ததும் அதை எடுத்துக்கொண்டு இருவரும் ஓட்டம் பிடித்தனர்.

அதிர்ச்சி அடைந்த வினோத்தும், அவரது கார் ஓட்டுநரும் கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர். ஜோஸ் மட்டும் பிடிபட்டார். அவரிடம் இருந்த நகைப் பெட்டியும் மீட்கப்பட்டது. ஜிம்மி தப்பிச் சென்றுவிட்டார். பிடிபட்ட ஜோஸை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் காவல் ஆய்வாளர் பிரகாஷ் விசாரணை நடத்தினார்.

உயர் அதிகாரி தகவல்

கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கைது செய்யப்பட்டுள்ள ஜோஸ், தப்பிச்சென்ற ஜிம்மி இருவரும் நகைக் கண்காட்சி தொடங்குவதற்கு முன்பே சென்னை வந்து தங்கியுள்ளனர். கண்காட்சி குறித்த அனைத்து விவரங்களும் அவர்களுக்கு தெரிந்துள்ளது. இந்தக் கொள்ளை முயற்சியில் வேறு சில வெளிநாட்டு நபர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

கண்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு ஸ்டாலி லும் பல கோடி மதிப்புள்ள நகைகள் இருந்தன. இந்த நகைகளை கொள்ளையடிக்கும் நோக்குடன் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்திருப்பதால் இவர்கள் சர்வதேச கொள்ளையர்களாக இருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

கண்காட்சியில் வைக்கப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் முழுவதையும் ஆய்வு செய்து வருகிறோம். கொள்ளையர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காவலில் எடுத்து விசாரணை

பிடிபட்ட ஜோஸிடம் பலமுறை விசாரணை நடத்தியும் அவரிடம் இருந்து உண்மையை வரவழைக்க முடியவில்லை. அவர் பயிற்சி பெற்ற கொள்ளையர்போல இருக்கிறார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x