Published : 15 Jun 2015 08:04 AM
Last Updated : 15 Jun 2015 08:04 AM

தேனி மாம்பழங்களுக்கு கேரள அரசு தடை: விவசாயிகள் வேதனை

ரசாயனக் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தேனி மாம்பழங்களை கேரளத்தில் விற்பனை செய்ய அந்த மாநில அரசு தடை விதித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், சோத்துப்பாறை, அல்லிநகரம், போடி உட்பட பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் காசா லட்டு, கல்லாமை, செந்தூரம், பங்கனபள்ளி என்ற சப்பட்டை உள்ளிட்ட மா ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன. இந்த மாம்பழங்கள், உள்ளூர் தேவை போக கேரளத்துக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

இதனிடையே பூ பூத்து பிஞ்சு வைத்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த கோடை மழையால் பூக்கள் கருகின. மேலும், பலத்த காற்று வீசியதால் பிஞ்சுகள் உதிர்ந்தன. இதனால், விளைச்சல் குறைந்தது.

முன்பு சராசரியாக தினமும் 250 டன் வரை மாம்பழங்கள் வரத்து இருக்கும். தற்போது வெறும் 20 டன் வரை மட்டுமே மாம்பழங்கள் வருகின்றன.

இது குறித்து ‘தி இந்து’விடம் அல்லிநகரம் மா விவசாயி வி.தவமணி கூறியதாவது: தேனி மாவட்ட மாம்பழங்கள் ரசாயனக் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி கேரளத்தில் விற்பனை செய்ய அந்த மாநில அரசு நேற்று முன்தினம் தடை விதித்துள்ளது.

இதனால் உள்ளூரிலேயே மாம்பழங்களை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சிலர் மட்டும் கேரள எல்லையில் மாம்பழங்களை விற்று வருகின்றனர்.

கோடை மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில், கேரளமும் தடை விதித்துள்ளதால் தேனி மாவட்ட விவசாயிகள் வங்கியிலும், வெளி இடங்களிலும் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் கவலையில் உள்ளனர்.

உள்ளூரில் ஒரு கிலோ சப்பட்டை ரூ.5 முதல் ரூ.10, காசாலட்டு ரூ.15 முதல் ரூ.20, கல்லாமை ரூ.7 முதல் ரூ.10, செந்தூரம் ரூ.10 என குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வரத்து குறைந்து, விலையும் சரிந்துள்ளதால் மா சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்குவதோடு, கேரளம் விதித்துள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x