Last Updated : 04 May, 2015 06:11 PM

 

Published : 04 May 2015 06:11 PM
Last Updated : 04 May 2015 06:11 PM

பாளை சிறைவாசிகளின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு: இனிப்பு முதல் ஆடைகள் வரை அனைத்தும் கிடைக்கின்றன

பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதை தொடர்ந்து கிளை சிறைகளிலும் சிறை அங்காடிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

இனிப்பு, காய்கறிகள்

சிறைவாசிகளால் சிறைச்சாலை களில் தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்ய தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும் சிறை அங்காடிகள் திறக்க அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புழல் சிறை வளாகத்தில் ‘பீரிடம்’ என்ற பெயரில் முதல் சிறை அங்காடி தொடங்கப்பட்டது. பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் சிறை அங்காடி கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கப்பட்டது.

பாளையங்கோட்டை சிறையில் சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் அல்வா, லட்டு, பூந்தி, மைசூர்பாகு, ஜாங்கிரி, பாதுஷா, அதிரசம், முறுக்கு, மிக்சர், காரசேவு, மசால் கடலை போன்ற உணவு பண்டங்கள், நோட்டு புத்தகங்கள், பைல்கள், மெழுகுவர்த்திகள், ஆயத்த ஆடை வகைகள் மற்றும் சிறையில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள் இந்த கடையில் விற்பனை செய்யப்படுகின்றன. மக்கள் ஆதரவைத் தொடர்ந்து சிறை கைதிகளால் சிறிய உணவகமும் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தனியாக சிக்கன் கடையும் தொடங்கப்பட்டது. இந்த பொருட்கள் தரமானதாகவும், விலை குறைவாகவும் இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தூத்துக்குடியில்…

இதையடுத்து பாளையங் கோட்டை மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட சிறைகள் மற்றும் கிளை சிறைகளிலும் அங்காடிகளை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாகர்கோவில் மாவட்ட சிறையிலும், தூத்துக்குடி கிளை சிறையிலும் சிறை அங்காடி தற்போது திறக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கிளை சிறை அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களும் இங்கே விற்பனை செய்யப்படுகின்றன.

ரூ.1000-க்கு விற்பனை

கிளைச் சிறை கண்காணிப்பாளர் சிற்றரசு கூறும்போது, ‘பாளையங் கோட்டை மத்திய சிறையில் சிறைவாசிகள் தயாரிக்கும் பொருட்களை இங்கே விற்பனை செய்கிறோம்.

கிளைச் சிறையில் விசாரணை கைதிகளே உள்ளனர். அவர்களை எந்த வேலையிலும் ஈடுபடுத்த முடியாது. எனவே, பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து சிறை ஊழியர் ஒருவர் விற்பனை பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருட்கள் தரமானதாக இருப்பதால் தூத்துக்குடி மக்களின் வரவேற்பை படிப்படியாக பெற்று வருகிறது. தினசரி ரூ. 1000 வரை பொருட்கள் விற்பனையாகிறது. வரும் நாட்களில் இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்’ என்றார் அவர்.

திருவைகுண்டத்தில்…

பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆர். கனகராஜ் கூறும்போது, ‘ பாளையங்கோட்டை மத்திய சிறை கட்டுப்பாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 பெண்கள் சிறை, ஒரு பாஸ்டல் சிறை, 2 மாவட்ட சிறைகள், 7 கிளைச் சிறைகள் என மொத்தம் 12 சிறைகள் உள்ளன.

பாளையங்கோட்டை சிறையில் உள்ள சிறைவாசிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்காக கிளை சிறைகளிலும் சிறை அங்காடிகளை திறக்க முடிவு செய்துள்ளோம்.

அதன்படி தூத்துக்குடி கிளை சிறையிலும், நாகர்கோவில் மாவட்ட சிறையிலும் சிறை அங்காடிகளை திறந்துள்ளோம். அடுத்ததாக திருவைகுண்டம் மாவட்ட சிறை வளாகத்திலும், திருநெல்வேலி கொக்கிரகுளம் மகளிர் சிறை வளாகத்திலும் சிறை அங்காடிகளை திறக்க திட்டமிட்டுள்ளோம்.

ரூ. 17 லட்சம் லாபம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறை அங்காடி திறக்கப்பட்டு 15 மாதங்கள் ஆகின்றன. இதுவரை சிறைவாசி களால் தயாரிக்கப்பட்ட ரூ. 64 லட்சம் மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதில் லாபம் மட்டும் ரூ. 17 லட்சம் கிடைத்துள்ளது. இந்த லாபத்தில் 20 சதவீதம் பொருட்களை தயாரிக்கும் சிறைவாசிகளுக்கு ஊதியமாக கொடுக்கப்படுகிறது. 20 சதவீதம் அரசுக்கு செலுத்தப்படுகிறது. மீதித் தொகை சிறைவாசிகள் மேம்பாட்டுக்காக செலவு செய்யப்படுகிறது.

வீட்டுக்கு பணம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சுமார் 50 சிறைவாசிகள் இந்த பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். மாதம்தோறும் அவர்களது ஊதியம் அவர்களின் கணக்கில் சேர்க்கப்படும். இதனை அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்.

ஒரு காலத்தில் சிறைவாசிகள் தங்கள் செலவுக்கு பணம் கேட்டு குடும்பத்தினரை தொந்தரவு செய்வார்கள். ஆனால் தற்போது அந்நிலை மாறி சிறைவாசிகள் வீட்டுக்கு பணம் அனுப்பும் நிலை உருவாகியுள்ளது.

இந்த வேலையை செய்வதன் மூலம் சிறைவாசிகளின் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. வெளியே செல்லும் போது ஒரு நம்பிக்கையோடு செல்கின்றனர். மேலும், சிறைவாசிகள் மோசமானவர்கள் என்ற மக்களின் எண்ணமும் மாறுகிறது.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைவாசிகளால் மேலும் பல பொருட்களை தயாரிக்கவும், பல புதிய தொழில்களை உருவாக்கவும் முயற்சி செய்து வருகிறோம்’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x