Published : 11 May 2015 10:33 AM
Last Updated : 11 May 2015 10:33 AM

பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஆளில்லா பொம்மை விமானம் பறந்ததால் பரபரப்பு: பறக்கவிட்டவரிடம் போலீஸார் விசாரணை

பட்டினப்பாக்கத்தில் ஆளில்லா பொம்மை விமானத்தை பறக்க விட்டவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஆளில்லா பொம்மை விமானம் பறப்பதாக அப்பகுதி மக்கள் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

உடனே காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது, ஒரு நபர் விமானத்தை ரிமோட் மூலம் கண்ட்ரோல் செய்து கொண்டிருப்பதை பார்த்து, அவரை விமானத்தை கீழே இறக்கவைத்தனர்.

விசாரணையில், அவர் தி.நகரை சேர்ந்த ஹர்சா(30) என்பதும், குறும்படங்கள் தயா ரிப்பவர் என்பதும் தெரிந்தது. அவர் எடுக்கவிருக்கும் அடுத்த குறும்படத்துக்காக இடம் தேர்வு செய்யவும், வித்தியாச மான கோணங்களில் வீடியோ எடுக்கவும் இந்த ஆளில்லா பொம்மை விமானத்தை வாங்கி யிருக்கிறார். அதை சரியாக இயக்கி பயிற்சி எடுப்பதற்காக நேற்று பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு வந்து பறக்க விட்டது தெரியவந்தது.

பறிமுதல்

ஆளில்லா விமானத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதில் வீடியோ கேமராக்கள் எதுவும் இல்லை. இதனால் ஹர்சாவிடம் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துவிட்டு அவரை அனுப்பி விட்டனர்.

பொது இடங்களில் ஆளில்லா பொம்மை விமானங்களை பறக்க விடுவதற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும். சில நாட்களுக்கு முன்பு வீடியோ கடைக்காரர் ஒருவர் பறக்கவிட்ட ஒரு டிரோன் பட்டினப்பாக்கத்தில் ஒரு ஓட்டல் மீது விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x