Published : 25 May 2015 10:30 AM
Last Updated : 25 May 2015 10:30 AM

காங்கிரஸ் கலாச்சாரத்தை விட்டுவிடுங்கள்: தமாகா நிர்வாகிகளுக்கு ஜி.கே. வாசன் எச்சரிக்கை

கோஷ்டி அரசியல் நடத்தும் காங் கிரஸ் கலாச்சாரத்தை இன்றோடு விட்டுவிடுங்கள் என்று தமாகா நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் நேற்று நடை பெற்ற கட்சியின் முதல் செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:

புதிய கட்சி தொடங்கி 7 மாதத்தில் 45 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகை யில் புதிய நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். கட்சிப் பணி மட்டுமே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

கோஷ்டி சேர்ந்துகொண்டு ஒருவரையொருவர் வீழ்த்த துடிக் கும் காங்கிரஸ் கலாச்சாரத்தை இன்றோடு விட்டுவிடுங்கள். பதவியை கொடுத்த எனக்கு பதவியிலிருந்து நீக்கவும் அதிகாரம் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.

புதிய மாவட்டத் தலைவர்கள் அனைவருக்கும் 3 மாதம் அவகாசம் தருகிறேன். அதற்குள் அனைவரையும் அரவணைத்து கட்சி வளர்ச்சிப் பணியில் சிறப்பாக செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படாதவர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்துவிடுவது நல் லது. யாருடன் கூட்டணி என்பதை யெல்லாம் தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

அதுபற்றி கவலைப்படாமல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இப் போதிருந்தே நீங்கள் உழைக்க வேண்டும்.

இவ்வாறு வாசன் பேசினார்.

மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் பேசும்போது, ‘‘தனித்துப் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். ஆனாலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியா அல்லது கூட்டணியா என்பதை ஜி.கே. வாசன் முடிவு செய்வார். நாம் அனைவரும் கட்டுப்பாட்டோடு கட்சிப் பணியாற்ற வேண்டும்’’ என்றார்.

எஸ்.ஆர்.பி. புறக்கணிப்பு

கடந்த நவம்பரில் தமாகா தொடங்கிய பிறகு நடந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் பங்கேற்றார். ஆனால் நேற்று நடந்த முதல் செயற்குழுவில் பங்கேற்க வில்லை. தான் பரிந்துரைத்தவர் களுக்கு பதவி தராததால் கூட்டத்தை அவர் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x