Published : 02 May 2015 11:12 AM
Last Updated : 02 May 2015 11:12 AM

பேரூர் தமிழ்க் கல்லூரியில் பறை இசைப் பயிற்சி

கோவை பேரூர் தமிழ்க் கல்லூரியில் நிமிர்வு கலையகம் சார்பில் 3 நாள் பறை இசைப் பயிற்சி நேற்று தொடங்கியது.

தமிழ்ப் பண்பாட்டு, கலாச்சார அடையாளங்களில் பறை இசைக்கான அடையாளத்தை கல்லூரி மாணவர்கள் வழியே மீட்டெடுத்து, பயிற்சி அளித்து வருகிறது `நிமிர்வு கலையகம்’ என்ற அமைப்பு.

அந்த அமைப்பினரும், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி நிர்வாகத்தினரும் இணைந்து 3 நாள் பறை மற்றும் நடனப் பயிற்சியை தொடங்கினர். பறையில் இசை ஒலியை எழுப்புவது குறித்து ஹரிதாஸ் பயிற்சி அளித்தார். அவர் பேசியதாவது:

தமிழ் இசைகளில் முதன்மையானது பறை இசை. அதை சாவு மேளமாகவும், சாமி மேளமாகவும் அடித்து, சாதிக்குள் அடையாளப்படுத்தி வைத்துவிட்டது சமூகம். சாதியை அடையாளப்படுத்தி இசையையும், இசைக் கலைஞனையும் அவமானப்படுத்துகின்றனர்.

கோயில் திருவிழாக்களை பொறுத்தவரை மேடைகளில் இந்த இசையை இசைக்க அனுமதிக்கிறோம். ஆனால், முச்சந்தியில் நின்று சாமியை அழைப்பதற்காக அடிக்க வைப்பதை அனுமதிப்பதில்லை என்றார்.

இந்த பயிற்சி ஏற்பாடு குறித்து `தி இந்து’ விடம் ஹரிதாஸ் பேசும்போது, ‘நான் கல்லூரியில் படிக்கும்போது இந்த கலையை கத்துகிட்டேன். சக மாணவர்களுக்கும் இந்தக் கலையை கத்து கொடுத்தேன். ஒவ்வொருவரும் கல்லூரிகளை அணுகி, நண்பர்கள் மூலமா பேசி இதில் ஆர்வமுள்ளவர்களை வைத்து குழுவாக இந்த பயிற்சியை ஆரம்பித்தோம். 3 மாதம் முன்பு விஎல்பி கல்லூரியில் 20 பேரைக் கொண்டு பயிற்சி நடத்தினோம். பின்னர், பேரூர் தமிழ்க் கல்லூரி எங்களுக்கு இடம் தந்தது. ஒரு மாதமாக இதில் ஆர்வமுள்ளவர்கள் மூலம் பேசி, 20 பேரை திரட்டி 3 நாள் பயிற்சி தருகிறோம்’ என்றார்.

பேரூர் தமிழ்க் கல்லூரியின் பொறுப்பாளர்கள் கூறும்போது, ‘தமிழின் தொன்மையான இசைகளில் முதன்மையானது பறை இசை. அருகி வரும் இந்த இசைக் கலையை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நம் தமிழ்ச் சமூகத்துக்கு இருக்கிறது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x