Last Updated : 15 May, 2015 07:45 AM

 

Published : 15 May 2015 07:45 AM
Last Updated : 15 May 2015 07:45 AM

மீண்டும் அதிமுகவில் சேர ஆயத்தம்: திருச்செந்தூரில் போட்டியிட ஜெயலலிதாவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் அழைப்பு

அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் தொகுதியில் இருந்து முதன்முதலில் 2001-ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 2002 முதல் 2006 வரை தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார். அதிமுகவின் தூத்துக்குடி மாவட்டச் செயலாள ராகவும் இருந்தார்.

தொடர்ந்து, 2006 சட்டப் பேரவைத் தேர்தலிலும் திருச்செந் தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், மு.க.அழகிரியுடன் தொடர்பு வைத்துள்ளதாக எழுந்த புகாரின்பேரில், 2008-ம் ஆண் டுக்குப் பிறகு கட்சித் தலைமையால் ஓரம்கட்டப்பட்டார். இதனால், 2009-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, 2009, டிசம்பரில் நடைபெற்ற திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலிலும், அதைத் தொடர்ந்து 2011-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலிலும் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். தற்போது வரை எம்எல்ஏவாக உள்ளார்.

திமுக மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமியைத் தாண்டி அனிதா ராதாகிருஷ்ணனால் வளர முடியவில்லை. கட்சித் தலைமையும் பெரியசாமிக்கே முக்கியத்துவம் கொடுத்ததால், கடந்த 2 ஆண்டுகளாகவே திமுக தலைமை மீது அனிதா ராதா கிருஷ்ணன் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் சேரப் போகிறார் என கடந்த ஓராண்டாகவே தகவல்கள் வெளியாகி வந்தன.

பகிரங்கமாக ஆதரவு

இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப் பட்டதை வரவேற்று பகிரங்கமாக கருத்து தெரிவித்தார். அதிமுக வுக்கு செல்ல வாய்ப்பை எதிர் பார்த்திருப்பதாகவும், திருச்செந் தூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால், அவருக்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜி னாமா செய்யத் தயார் என்றும் பேட்டி கொடுத்தார். இதையடுத்து அதிருப்தி அடைந்த திமுக தலைமை, அவரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணன் ‘தி இந்து’-விடம் கூறியதாவது:

திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ வாக எனது பணியை செய்யவிடா மல், அரசியல் பணியையும் முடக்கும் வேலைகளை தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி செய்தார். அவரது தூண்டுதலின் பேரில் என் மீது பொய் வழக்கு போடப்பட்டது. கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டு 37 நாட்கள் திருச்சி சிறையில் இருந்தேன்.

அரசியல் போராட்டங்களில் பங்கேற்று கட்சிக்காக சிறை சென்றுள்ளேன். ஆனால், கிரிமினல் வழக்கில் சிறை சென்றது இதுதான் முதல் முறை. அதுவும் மாவட்டச் செயலாளர் தூண்டுதலால்தான் சிறை சென்றேன். சிறையில் இருந்து வெளியே வந்ததும் கட்சித் தலைமை யிடம் கூறினேன். ஆனால், கட்சித் தலைமை கண்டுகொள்ளவில்லை. எனவே, கட்சி நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாமல் விலகி இருந்தேன்.

நிரந்தரமாக நீக்கினால் மகிழ்ச்சி

இனியும் திமுகவில் இருந்தால், நான் கிரிமினல் குற்றவாளியாக்கப் படுவேன். எனது குடும்பமே கிரிமினல் குற்றவாளி களாக்கப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. எனவே, திமுகவில் இருந்து விலக மனதளவில் முடிவு செய்திருந்தேன். இந்நிலையில், என்னை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளனர். நிரந்தரமாக நீக்கினால் மகிழ்ச்சியாக இருக்கும்.

என்னை உருவாக்கியது அதிமுகதான். அந்தக் கட்சியில் இருந்து விலகியது, நான் செய்த மிகப்பெரிய தவறு. அந்தத் தவறை நினைத்து தினமும் வருத்தப்படுகிறேன். மீண்டும் அதிமுகவில் அடிமட்ட தொண்டனாக பணியாற்ற ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்தால் மகிழ்ச்சியாக பணியாற்றுவேன். அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். ஜெயலலிதா அந்த வாய்ப்பைத் தருவார் என நம்புகிறேன். ஒருவேளை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், வேறு எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை.

ராஜினாமா செய்ய தயார்

கட்சியில் இருந்து நீக்கியதால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். தொடர்ந்து, தொகுதி மக்களுக்காக பணியாற்று வேன். திருச்செந்தூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட விரும்பினால் அவருக்காக எனது எம்எல்ஏ பதவியை உடனடியாக ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப் பட்டிருப்பதால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். அந்த வகையில் எனது மகிழ்ச்சியையும் தெரிவித்தேன் என்றார் அனிதா ராதாகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x