Published : 30 May 2015 11:47 AM
Last Updated : 30 May 2015 11:47 AM

சென்னை ஐஐடி மாணவர் அமைப்பு மீதான தடையை திரும்பப் பெறுக: வைகோ

சென்னை ஐஐடியில் இயங்கி வரும் அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டம் அமைப்பு மீதான தடையை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி) அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டம் என்ற அமைப்பு (Ambedkar Periyar Student Circle - APSC) ஐஐடியின் அங்கீகாரத்துடன் செயற்பட்டு வருகிறது.

அரசியல் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கொள்கை கோட்பாடுகளையும், சிந்தனைகளையும் மாணவர்களிடையே கொண்டு சென்று ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும் பணியை, அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டம் அமைப்பு செய்து வருகிறது.

இந்த அமைப்புக்கு சென்னை ஐஐடி நிர்வாகம் திடீரென்று தடை விதித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மோடி அரசின் இந்தி மொழித் திணிப்பு, மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க முயற்சி மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் போன்றவற்றை அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டம் அமைப்பு விவாதப் பொருளாக ஆக்கியதால், ஆத்திரமடைந்த சிலர் மத்திய அரசுக்கு அனாமேதேய புகார் கடிதம் அனுப்பி உள்ளனர்.

உடனே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆணையின் பேரில் இத்துறையின் இணைச் செயலாளர் பிரிஸ்கா மேத்யூ, மே 15 ஆம் தேதி சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கு கண்டனக் கடிதம் எழுதியுள்ளார்.

மே 24 ஆம் தேதி சென்னை ஐஐடி நிர்வாகம், அம்பேத்கர்-பெரியாரிய சிந்தனைகளைப் பரப்பிய மாணவர் அமைப்பான ஏபிஎஸ்சிக்கு தடை விதித்துள்ளது. ஆனால், அமைச்சர் ஸ்மிருதி இரானி முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல, அமைப்புக்கு தடை விதித்தது தனக்கு தெரியாது என்று அப்பட்டமாக பொய் சொல்கிறார். அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டம் அமைப்பு பிரதமர் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாகவும், பாஜக அரசின் செயற்பாடுகள் குறித்து கருத்துப் பரவல் செய்வதாகவும் ஐஐடி நிர்வாகம் கூறியுள்ளது.

இந்துத்வா சக்திகளின் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை விமர்சனம் செய்வதும், அம்பேத்கர்-பெரியார் சிந்தனைகளை பரப்புவதும், பெரும் குற்றம் என்பதுபோல ஐஐடி நிர்வாகம் சித்தரித்து மாணவர் அமைப்புக்கு தடை விதிப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.

மக்களாட்சியில், அரசியல் சட்டம் வழங்கி உள்ள அடிப்படைக் கருத்து உரிமையை பறிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை என்பதை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் உணர வேண்டும். சென்னை ஐஐடியில் இயங்கி வரும் அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டம் அமைப்பு மீதான தடையை உடனே திரும்ப பெற வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x