Published : 11 May 2015 10:36 AM
Last Updated : 11 May 2015 10:36 AM

மாநகர பேருந்துகளில் இருக்கை ஆக்கிரமிப்பால் முதியோர் பாதிப்பு

மாநகரப் பேருந்துகளில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளை மற்றவர்கள் ஆக்கிரமிப்பதால் வயதானவர்கள் அவதிப்படுகின்றனர்.

இது தொடர்பாக திருவொற்றியூரைச் சேர்ந்த பி.கே.ஈஸ்வரன், ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ மூலம் கூறியதாவது:

மாநகரப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோர், பெண்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டு, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த இருக்கை ஒதுக்கீடு முறையை பெரும்பாலான பேருந்துகளில் பின்பற்றுவதில்லை. வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளின் இருக்கைகளில் இளைஞர்கள், பெண்கள் அமர்ந்துகொள்கின்றனர். வயதானவர்கள் வந்தாலும் இடம் தருவதில்லை. இதனால், வயதானவர்களும், மாற்றுத் திறனாளிகளும் நீண்ட தூரம் நின்றுகொண்டே பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது.

எனவே, அந்தந்த பேருந்து நடத்துநர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வடசென்னைக்கு இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளன. இருக்கைகள், கண்ணாடிகள் உடைந்த நிலையில் இருக்கின்றன. எனவே, மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரி விளக்கம்

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பேருந்துகளில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வந்தால், அவர்களுக்கான இடத்தை ஒதுக்கித் தரவேண்டும் என நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த வழித்தடத்தில் இந்த விதிமுறை மீறப்படுகிறது என்பது குறித்து சம்பந்தப்பட்ட பயணிகள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x