Published : 11 May 2015 10:55 AM
Last Updated : 11 May 2015 10:55 AM

வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் சிறுவன் உட்பட 4 பேர் பலி

பூந்தமல்லி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருகே உள்ள சுந்தரசோழபுரத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (34). இவர் நேற்று முன் தினம் மாலை, தன் அக்கா வள்ளி (36), தம்பி சதீஷ் (30) ஆகியோருடன் பைக்கில் திருவள்ளூர் அருகே கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில், செந்நீர்க்குப்பம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலை தடுப்புச் சுவரில் பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த மஞ்சுநாதன் அதே இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அம்பத்தூரை அடுத்த ஒரகடத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (42). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் நள்ளிரவு பணி முடிந்து, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். செங்குன்றம் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியதில் அதே இடத்திலேயே ராஜேஷ் உயிரிழந்தார். அயப்பாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சதீஷ்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பூந்தமல்லி அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (45). நேற்று முன் தினம் இரவு நண்பர் சங்கரன்(34) என்பவருடன் பைக்கில் திண்டிவனத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். வண்டலூர்- நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில், மலையம்பாக்கம் அருகே சென்றபோது, சாலையோர மின்கம்பத்தில் பைக் மோதியது. இதில், படுகாயமடைந்த பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கரன் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவேற்காடு முருகன் மகன் பரத் (14). 9-ம் வகுப்பு மாணவன். நேற்று முன் தினம் இரவு பைக்கில் திருவேற்காடு சிவன் கோயில் அருகே வேகத்தடையை கவனிக்காமல் சென்றதால் கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்து, பூந்தமல்லி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவங்கள் குறித்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x