Last Updated : 13 May, 2015 07:22 AM

 

Published : 13 May 2015 07:22 AM
Last Updated : 13 May 2015 07:22 AM

கும்பாபிஷேகத்துக்கு தயாராகும் பார்த்தசாரதி கோயில்: உப்புக் காற்று பாதிப்பை தடுக்க இயற்கை முறையில் நடக்கும் புனரமைப்பு பணிகள்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் விரைவில் நடக்கவுள்ளது. கோயிலின் பழமையை பாது காக்கவும் உப்புக் காற்றின் பாதிப்பை தவிர்க்கவும் முழுக்க முழுக்க இயற்கை முறையிலான பூச்சுக்கள், தெளிப்பான்களை கொண்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் மிகப் பழமையான வைணவத் தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலின் கும்பாபிஷேக பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

எட்டாம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தை சேர்ந்த இந்த கோயிலின் பழமையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 2004-ம் ஆண்டு நடந்தது. 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பா பிஷேகம் நடத்த வேண்டும் என்ற ஆகம விதிகளின்படி தற்போது மீண்டும் கும்பாபிஷேகம் நடக்க வுள்ளது. கடந்த ஜனவரி மாதம் பாலாலயத்துடன் தொடங்கிய திருப்பணி இப்போது 90 சதவீதம் அளவுக்கு நிறைவடைந்துள்ளது.

பக்தர்கள் மற்றும் அரசு தரப்பிலிருந்து ரூ.5 கோடி அளவில் நிதி பெறப்பட்டு பணிகள் நடக்கின்றன. கோயில் புனரமைப்பு பணி என்ற பெயரில் பழமையை சிதைத்துவிடக்கூடாது என்னும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பணிகள் நடக்கின்றன. இதற்காக கோயிலின் உட்புறத்தில் இருந்த நவீன மொசைக் கற்கள், துரு பிடிக்கக்கூடிய இரும்பு சாமான்கள், சிதிலமடைந்த மரப்பட்டைகள் போன்றவற்றை நீக்கி முழுக்க முழுக்க இயற்கையோடு இயைந்த பொருட்களைக் கொண்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

திருவல்லிக்கேணி கடலுக்கு அருகேயுள்ள பகுதி என்பதால், உப்புக் காற்றின் பாதிப்பை தடுக்க கோயிலின் சுற்றுப்புற சுவர்களை பராமரிப்பதற்காக கெமிக்கல் தெளிப்பான்களை தவிர்த்து ஆர்கானிக் மூலிகை எண்ணெய் மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வரு கிறது. இது வைரஸ் மற்றும் புஞ்சைகளை எதிர்க்கக்கூடியது. தமிழகத்தில் முதன்முதலாக இந்த முறை பின்பற்றப்படுகிறது.

மொசைக் கற்களை தவிர்த்து கருங்கற்களே பயன்படுத்தப் படுகின்றன. சிமென்ட்டை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சுண் ணாம்பு, அரக்கு, கடுக்காய் சேர்த்து அரைத்து பூச்சு வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மர வேலைகளை பாதுகாக்கவும் இப்படி இயற்கையான மூலிகை திரவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தரிசனத்துக்காக வரிசையில் செல்ல கம்பிகள் நடப்பட்டிருந்தன. அதற்காக தரையில் விரிசல்கள் விட்டதால், அதற்கு பதிலாக துளைகளைக் கொண்ட கருங் கற்களில் தடுப்புகளை இணைக்கும் பணி நடக்கிறது.

ஆனந்த விமானத்துக்கு 1939-ம் ஆண்டில் தங்கத்தகடு பொருத்தப்பட்டது. இந்நிலையில், இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் புதிதாக தங்க தகடுகள் பதிக்கப்படுகின்றன. இதற்கான தயாரிப்பு பணிகள் கோயிலின் அருகேயுள்ள பேயாழ் வார் சன்னதியில் நடக்கிறது.

இதுதவிர கோயிலில் உள்ள 29 கலசங்களுக்கும் செம்புக்கு பதிலாக தங்க முலாம் பூசப்பட வுள்ளது. சிற்பங்கள், தூண்கள் அப்படியே அதனுடைய பழமையான கலாச் சாரத்தை உணர்த்த வேண்டும் என்பதற்காக கல்வெட்டுகளை தனித்தனியே நடவுள்ளோம்.

சிற்பங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் உதவியோடு புனரமைக்கின்றோம். கோயிலின் எதிரே பராமரிப்பின்றி இருந்த நீராட்டு மண்டபம் தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2 அடிக்கும் மேலாக தரையில் புதைந்திருந்த பேயாழ்வார் சன்னதியின் சுவர்கள் தோண்டி யெடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கதவிலும் பித்தளை திருகுகள் போடப்பட்டுள்ளன, எச்சரிக்கை கருவிகளும் பொருத் தப்படவுள்ளன. 36 சிசிடிவி கேமராக்கள் இடம்பெறவுள்ளன. மின்சார சிக்கனத்துக்காக ட்யூப் லைட்டை தவிர்த்து எல்.இ.டி. விளக்கு பொருத்தப்படுகிறது. சோலார் கூரை அமைக்கும் பணியும் நடக்கிறது. மேலும் 7.5 டன் எடை கொண்ட ஏ.சி.யூனிட் ஒன்று தென் கொரியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. திருப்பணி வேலைகள் முழு மூச்சில் நடப்பதால் விரைவிலேயே கும்பாபிஷேக தேதியும் அறிவிக்கப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x