Published : 20 May 2015 07:41 AM
Last Updated : 20 May 2015 07:41 AM

கர்னாடக இசையை ஜனரஞ்சகமாக்கி மக்களிடம் சேர்த்தவர் அரியக்குடி: 125-வது பிறந்தநாள் விழாவில் இல.கணேசன் புகழாரம்

கர்னாடக இசையின் புனிதம் குறையாமல் அதை ஜனரஞ்சகமாக்கி மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.

மறைந்த கர்னாடக இசை மேதை அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் 125-வது ஆண்டு பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று கொண்டாடப் பட்டது. இந்திய கலாச்சார தொடர்பு மையமும், ஸ்ரீ அரியக்குடி இசை அறக்கட்டளையும் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திரு ந்தன. இதில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:

அந்தமான் சிறையில் சாவர்க்கர் பற்றிய ஒலி, ஒளி படம் ஒன்று காட்டப்படும். அதில் சாவர்க்கரின் வாழ்க்கையை மரம் ஒன்று விவரிக் கும். அதுபோல, அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் பற்றி யாராவது படம் எடுத்தால், ஊஞ்சல் ஒன்று அவரது வரலாற்றை சொல்வதுபோல அமைக்க வேண்டும். ஏனென்றால், எந்நேரமும் ஊஞ்சலில் இருப்பவர் அரியக்குடி.

திருவையாறு தியாகராஜர் ஆராதனைக்கு சென்றபோது, அருகில் தமிழிசைக் கச்சேரி ஒன்று நடப்பதைப் பார்த்தேன். தியாகராஜர் ஆராதனைக்கு போட் டியோ என்றுகூட நினைத்தேன். ஆனால், உண்மை அதுவல்ல. அதை உருவாக்கியவர் சர் அண்ணாமலை செட்டியார். ராஜாஜிதான் தொடங்கிவைத்தார். தமிழிசைக் கச்சேரியின் முதல் நிகழ்ச்சியில் பாடிய பெருமை அரியக்குடி ராமானுஜ ஐயங்கா ருக்கு உண்டு. கர்னாடக சங்கீதத் தின் புனிதம் சிறிதும் குறையாமல், அதை ஜனரஞ்சகமாக மக்களோடு இணைத்த பெருமை அவருக்கு உண்டு. இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

அரியக்குடியின் சிஷ்யர் ஆலப்புழா வெங்கடேசன் பேசும்போது, ‘‘20-ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற சங்கீத வித்வான் என் குரு அரியக்குடி. தலைசிறந்த கர்னாடக இசைப் பாடகர்கள் பலருக்கு குருவாக விளங்கிய பெருமையும் அவருக்கு உண்டு. இன்றைய தலைமுறை பாடகர்களிடம்கூட அவரது தாக்கம் உள்ளது’’ என்றார்.

நிகழ்ச்சியில் இந்திய கலாச்சார தொடர்பு மையத்தின் மண்டல இயக்குநர் கே.அய்யனார், கர்னாடக சங்கீத சபாவின் பொதுச் செயலாளர் ஆர்.மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், பேராசிரியர் டி.என்.கிருஷ்ணன், விஜி கிருஷ்ணனின் வயலின் கச்சேரியும் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x