Published : 06 May 2015 07:51 AM
Last Updated : 06 May 2015 07:51 AM

எஸ்ஆர்எம் பல்கலை. நுழைவுத் தேர்வு தமிழக மாணவர் முதலிடம்: கலந்தாய்வு மே 17-ல் தொடக்கம்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தின் 2015-16-ம் ஆண்டுக்கான பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான SRMJEEE 2015 நுழைவுத் தேர்வு ஏப்ரல் 19 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக வேந்தர் நேற்றுமுன்தினம் வெளியிட்டார்.

நுழைவுத் தேர்வை எழுத இந்திய அளவில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த  சங்கரா மேல்நிலைப்பள்ளி மாணவர் ராகவன் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். டெல்லி பப்ளிக் ஸ்கூல் மாணவர் சாகர் கோயல், கொல்கத்தா செயின்ட் சேவியர் காலேஜியட் ஸ்கூல் மாணவர் சுபம் ராஜ்கரியா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.

மாணவர் கலந்தாய்வு குறித்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

தரவரிசைப் பட்டியலில் முதல் 6 ஆயிரம் வரை இடம்பிடித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு மே 17-ம் தேதியும், 12 ஆயிரம் வரை இடம்பெற்றுள்ள மாணவர்களுக்கு மே 18-ம் தேதியும், 18 ஆயிரம் வரை மே 19-ம், 26 ஆயிரம் வரை மே 20-ம் தேதியும் காட்டாங்கொளத்தூரில் உள்ள பல்கலைக்கழக முதன்மை வளாகத்தில் நடைபெறவுள்ளது. 70 ஆயிரம் வரையில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு மே 21 முதல் 24-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

தரவரிசைப் பட்டியலில் முதல் 50 இடங்களைப் பெற்றவர்களுக்கு பாரிவேந்தர் பெயரில் உருவாக்கப்பட்ட நிறுவனர் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், பஸ் கட்டணம், புத்தகக் கட்டணம் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதோடு மாணவர்களுக்கு ரூ.1000 மாதாந்திர செலவுக்கு வழங்கப்படும்.

தரவரிசைப் பட்டியலில் பெற்றுள்ள இடத்துக்கு ஏற்ப கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்த மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும் எம்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

கலந்தாய்வு அரங்கிலேயே பல்வேறு வங்கிகளில் கல்விக்கடன் உதவிபெற ஏற்பாடு செய்யப்படுகிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x