Published : 13 May 2015 07:47 PM
Last Updated : 13 May 2015 07:47 PM

மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்கள், ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலாளர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள், 1954-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ என மூன்று வகைகளில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது நலன், குடிமைப்பணி, வணிகம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் செய்யப்பட்ட தனித்துவமான சாதனைகள் மற்றும் பணிகளை அங்கீகரிக்க இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. சாதி, தொழில், தகுதி அல்லது பால் இனம் ஆகியவற்றில் வேறு பாடின்றி அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்படுகிறது.

2016-ம் ஆண்டு வழங்கப்பட உள்ள விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான விவரக்குறிப்புகள் (Nominations), உரிய படிவத்தில் கூடுதல் விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன், ‘அரசு முதன்மைச் செயலர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600009’ என்ற முகவரிக்கு ஜூலை 31ம் தேதிக்கு முன்பு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த விருதுக்கான தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x