Published : 29 May 2015 10:05 AM
Last Updated : 29 May 2015 10:05 AM

மோடி, பாஜக அரசுக்கு எதிராக பிரச்சாரம்: மாணவர் அமைப்புக்கு சென்னை ஐ.ஐ.டி. தடை

மத்திய அரசின் கொள்கைகள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்து மதத்தினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொண்டதாக ஏபிஎஸ்சி என்ற மாணவர் அமைப்புக்கு ஐ.ஐ.டி. சென்னை தடை விதித்துள்ளது.

அம்பேத்கார்-பெரியார் ஸ்டடி சென்டர் (ஏபிஎஸ்சி) என்ற அமைப்பினை சென்னை ஐ.ஐ.டி.யின் ஒரு பிரிவு மாணவர்கள் இணைந்து இயக்கி வருகின்றனர். இந்நிலையில், இந்த அமைப்பு மீது அண்மையில் பெயர் குறிப்பிடாத சிலர் புகார் தெரிவித்தனர்.

அந்த புகார் மடலில், "ஏபிஎஸ்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசின் கொள்கைகளை அவதூறாக விமர்சித்தும், பிரதமர் மோடிக்கும், இந்து மதத்தினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 15-ம் தேதியன்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணைச் செயலர் பிரிஸ்கா மேத்யூவிடம் இருந்து சென்னை ஐ.ஐ.டி தலைமைக்கு இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டது.

இத்தகைய சூழலில்தான், புகார் கடிதத்தையும், மத்திய அரசு விளக்கம் கோரி அனுப்பிய கடிதத்தையும் சுட்டிக்காட்டி சென்னை ஐஐடி தலைவர், ஏபிஎஸ்சி அமைப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

டீன் அனுப்பிய மின்னஞ்சல்:

ஏபிஎஸ்சி அமைப்பின் மீதான தடை குறித்து, ஐஐடி மாணவர்கள் பிரிவு தலைவர் சிவகுமாr எம். ஸ்ரீனிவாசன் கூறும்போது, "ஏபிஎஸ்சி அமைப்பு மீது தடை விதிக்கப்பட்டது குறித்து கடந்த 22-ம் தேதியே எனக்கு தெரிய வந்தது. மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏபிஎஸ்சி அமைப்பு தனக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தை துஷ்பிரயேகம் செய்தத்தால் தடை செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

ஏபிஎஸ்சி உறுப்பினர்கள் மாணவர்கள் அமைப்புக்கான சட்டத்திட்டத்தை கடைபிடிக்க தவறியுள்ளனர். ஐஐடி வளாகத்தில் இயங்கும் எந்த ஒரு மாணவர் அமைப்பும் அதன் நடவடிக்கைகளுக்கு மாணவர் தலைவரிடம் இருந்து முன்னனுமதி பெற வேண்டியது கட்டாயம். புகார் கடிதத்தில் சான்றுக்காக இணைக்கப்பட்டுள்ள போஸ்டர்களை பார்த்தேன். அந்த போஸ்டர்களை பயன்படுத்த ஏபிஎஸ்சி அமைப்பினர் என்னிடம் முன்னனுமதி பெறவில்லை" என்றார்.

அதேவேளையில் ஏபிஎஸ்சி உறுப்பினர் கூறும்போது, "எங்கள் அமைப்பின் மீது தடை உத்தரவு பாய்ந்துள்ளது குறிப்பிட்ட அந்த மின்னஞ்சல் வரும்வரை எங்களுக்குத் தெரியாது. எங்களிடம் எவ்விதமான விளக்கமும் கோரப்படவில்லை. மாறாக டீன் எங்களிடம் இதுபோன்ற நடவடிக்கைகளில் இனிமேல் ஈடுபட மாட்டோம் என்ற உறுதிமொழியை மட்டுமே பெற்றுக் கொண்டார்" எனக் கூறினார்.

இந்நிலையில் டீன் தடை உத்தரவு ஏற்புடையதல்ல எனக் கூறி ஏபிஎஸ்சி அமைப்பினர் ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், "ஏபிஎஸ்சி அமைப்பு அம்பேத்கர், பெரியார் சிந்தனைகளை ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக பரப்பி வருகிறது. அதேபோல் நவீன காலத்திலும் இந்து மேல் சாதி ஆதிக்கம் எப்படி கட்டவிழ்க்கப்படுகிறது அதற்கு பின்னணியில் எத்தகைய சித்தாந்தங்கள் இயங்குகின்றன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதை மட்டுமே ஏபிஎஸ்சி செய்கிறது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x